Tamil Sanjikai

ஆடி மாதத்தில் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் பிடித்த பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடக்கிறது. அதுபோல தான் இங்குள்ள அவ்வையார் அம்மன் வழிபாடுகளும் பிரசித்தம் பெற்றவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையார், முப்பந்தல்,சீதப்பால்,குறத்தியறை என மூன்று இடங்களில் வழிபடப்படுகிறார்.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

சீதப்பால் மற்றும் குறத்தியறை ஊர்களில் உள்ள அவ்வையார் கோயில்கள் சமண சமயத்து அவ்வையாரை மூலவலராக கொண்டவை. அதில் குறத்தியறை குடவரைக் கோவிலாகும். நாகர்கோவிலிருந்து கடுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் குறத்தியறை. அழகியபாண்டியபுரம் போகும் முன்பு உள்ள சந்திப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் குறத்தியறை ஐந்துகிரி மலையடிவாரத்தில் காணப்படும். மலைச்சரிவில் தெற்குப் பார்வையாக கருவறையில் நின்ற நிலையிலான திருமாலின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இருப்பினும் அதற்குச் சிவப்புப் பாவாடை அணிவித்து அவ்வையாரம்மனாக வழிபடப்படுகிறது. சிற்பத்தின் கையில் சங்கு சக்கரம், வரத, ஊரு ஹஸ்தங்களுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பமாக உள்ளது.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

கருவறைக் குடைவரையின் வெளிப்புறத்தில் பாறைச் சரிவின் மேற்கில் வலதுப்பக்கத்தில் பிள்ளையாரும், கிழக்கில் இடதுப்பக்கத்தில் சிற்பம் உருவாக்கும் முயற்சி தொடக்கத்திலேயே கைவிடப்பட்டுள்ளது. குமரியில் வழங்கும் நாட்டார் கதைகளும் இக்குகையை அவ்வையாரம்மனை இணைத்துப் பேசுகிறது. எனவே இது ஒரு சமணப் பெண்துறவி தங்கியிருந்த குகை என கருதலாம். ஊரின் பெயரும் குரத்தி (சமணப் பெண் துறவி) யறை என வழங்கப்பட்டு, பின்பு மக்களால் குறத்தியறை என அழைக்கப்பட்டிருக்கவேண்டும். இதனை குறவந்தட்டுப்பாறை எனவும் அழைக்கிறார்கள். நாஞ்சில் நாட்டை ஆண்ட நாஞ்சில் பொருநனைப் பாடியதால் அவ்வையார் குமரியோடு தொடர்புடையவர் ஆகிறார். குறத்தியறைப் பகுதி நாஞ்சில் குறவன் வரலாற்றையும் கொண்டுள்ளது. இங்கு பாறையின் மீது 13 வரி வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

1904- ஆண்டு வாக்கில் இக்குடைவரை கோவிலைப் பார்வையிட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மார்புக்கவசம்,கண்மலடு சகிதம் பெண் தெய்வமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதை பார்த்துள்ளார்.அப்போதும் அவ்வையார் அம்மனாக வழிப்படப்பட்டிருக்கிறது .இதனை குறித்து 1915-ம் ஆண்டு கட்டுரையும் எழுதியுள்ளார். இச்சமணக்குடைவறைக்கோயில் 8-ம் நூற்றாண்டில் பிற்காலப்பாண்டியர்களால் விஷ்ணுக்கோயிலாக மாற்றம் செய்யப்பட்டது என்றும், குகைக்குள் உள்ள விஷ்ணுச்சிற்பம் முழுமைப்பெறாதது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

முந்தைய காலத்தில் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு வந்து அவ்வையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது நகைகள் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளத் தட்டு ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம்.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை இக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி மட்டும் கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது.ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊரை சேர்ந்த ஒருவர் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தாராம். உடனே "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் நகை கொடுக்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்பது நம்பிக்கை.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

இப்போதும் திருமணமாகாத பெண்களும், குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் அவ்வையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.திருமணமான சுமங்கலி பெண்கள் இல்லறம் இனித்திருக்கவும், கணவனின் ஆயுள் பலம் கூடவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள். அவ்வையார் நோன்பு இருக்கும் பெண்கள், ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல், மூத்த சுமங்கலி பெண் ஒருவரது வீட்டில் ஒன்றாக கூடுவார்கள்.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்து பூஜை செய்வார்கள். அப்போது அவ்வையார் மற்றும் அம்மன் கதைகளை, மூத்த சுமங்கலிகள் கூற, நோன்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவரும் அதை பயபக்தியுடன் கேட்பார்கள். பின்பு கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து அம்மனை வழிபட்ட பின், அதை மிச்சம் வைக்காமல் பெண்கள் அனைவரும் உண்பார்கள். இந்த நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. கொழுக்கட்டையுடன், கூழ் படைத்து வழிபடும் பெண்களும் உள்ளனர். தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் அவ்வையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகிறார்கள்.

குடவரைக்  கோவிலில் அவ்வையார்!

இக்கோவிலில் ஆடிமாத செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும்,மாத பௌர்ணமி.தைப்பூசம்,ஐப்பசி விழா,சித்திரை விஷூ போன்ற நாட்களில் விஷேச பூஜை நடக்கிறது. ஆடி மாத 4-வது செவ்வாய் கிழமையில், அவ்வையார் அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கொழுக்கட்டைகள் படைத்து அவ்வையார் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள் .இதில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்து அவ்வையார் அம்மனின் தரிசிக்க வருகிறார்கள் .

0 Comments

Write A Comment