Tamil Sanjikai

‘ஹேப்பி ஹார்டி அண்ட் ஹீர்’ என்ற படத்திலிருந்து ‘தேரி மேரி கஹானி’ என்னும் பாடலைக் கேட்டேன். அத்தனை ஆழமான ஒரு பெண்ணின் குரல் அது. உயிரை ஊடுருவிச் செல்லும் இசையினூடே அந்தக்குரல் என்னை வலுவாகப் பற்றிக் கொண்டது. ஸ்ரேயா கோஷால் இல்லை! கவிதா கிருஷ்ணமூர்த்தியா என்று பார்த்தால் அதுவும் இல்லை! யார் அந்தப்பாடகி என்று தேடிய போதுதான் என் கண்களில் கண்ணீர்.

அத்தனை ஆழ்ந்த குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு மெலிந்த சரீரத்தைக் கொண்ட, ஏழ்மையான தோற்றத்தையுடைய ஐம்பத்தியெட்டு வயதான ‘ரானு மரியா மொண்டல்’ என்ற ஒரு பெண்மணி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரானு மொண்டால் தன்னுடைய கணவரின் மரணத்துக்குப் பின் கொல்கத்தாவின் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்களில் அமர்ந்து பாடுவதைத் தொழிலாகக் கொண்டு வந்திருக்கிறார். அதில் வந்த குட்டி வருமானத்தில்தான் தன்னுடைய பசியைப் போக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்படி ஒருநாள் ரானு தன்னுடைய அழகிய குரலில் லதா மங்கேஷ்கரின் பாடல் ஒன்றைப்பாட, அந்த இனிமையான குரலைக் கேட்ட பிரயாணி ஒருவர், ரானு பாடுவதைக் காணொளியாக்கி இணையத்தில் உலவ விட்டிருக்கிறார். அதை டிவி நிறுவனம் ஒன்று பார்த்துவிட்டு, தங்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் பாட அழைத்திருக்கிறது. அங்கு விருந்தினராக அமர்ந்திருந்த ஹிமேஷ் ரேஷ்மியா ரானுவின் குரலைக்கேட்டு பிரமித்துப் போய் தன்னுடைய படத்தில் பாட வைக்குமாறு சத்தியம் செய்ததோடு நில்லாமல் பாடவும் வைத்து, அந்தப் பாடல் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்திருக்கிறது.

ரயில் நிலையப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, ஒருவேளை உணவுக்காக தன்னுடைய குரல்வளையை வருத்தி, துள்ளி விழும் சில்லரைக் காசுகளால் தனது பசிபோக்கிக் கொண்டிருந்த ஒரு பாவப்பட்ட ஜீவனின் துயரைத் துடைத்திருக்கிறார்கள் ஒரு தொலைக்காட்சி நிறுவனமும்,. ஒரு இசையமைப்பாளரும் என்கிற போது எல்லா காலங்களிலும் மனிதம் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய பணியைச் செய்து கொண்டுதானிருக்கிறது என்பதை உணரும்போதெல்லாம் என்னுடைய கண்களில் கண்ணீர் வழிந்து என் கன்னங்களை நனைய வைத்து விடும்.

ஒரு பலஹீனமான இதயத்தைக் கொண்ட என்போன்ற வறியோர்களையும் இந்த உலகம் மன்னித்துத் தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டுதானிருக்கிறது. எத்தனை திறமைகள் நம்மிடம் இருந்தாலும் அதனை வளர்த்து விட்டு, உரியவர்களிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்தான் எத்தனை அற்புதமானவர்கள்?

சிறுவயதிலிருந்தே நன்றாகப் படம் வரையவும், கடிதங்கள் எழுதவும் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு சிறுவனுக்கு அவனது அப்பா ஓவியம் வரையும் வர்ணங்கள், தூரிகைகள், காகிதங்கள் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்த வண்ணமிருந்தார். அவனது தாய்மாமன் ஒரு ஓவியன் மற்றும் புகைப்படக் கலைஞன். பத்து வயதில் அச்சிறுவனது கைகளில் அமர்ந்திருந்தது அவனது தாய்மாமனின் பழைய புகைப்படக்கருவி. அந்த புகைப்படக்கருவியை அறுவை சிகிச்சை செய்து அதிலுள்ள குவியாடிகளைப் பரலோகத்திற்கு அனுப்பி வைத்ததுதான் அந்தச் சிறுவன் செய்த முதல் பணி. பதின்மூன்றாவது வயதில் அவனது தாய்மாமா அவனுக்கு புகைப்படங்களை எடுக்கக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாய்மாமனைப் போலவே கலைகள் அறிந்த அந்தச் சிறுவனின் கைபிடித்து நடத்த ஆரம்பித்தார் அந்த மாமா. அவ்வப்போது வழிமாறி நடந்த அவனைக் கண்டித்து அவன் தன்னுடைய வழியில் சிரத்தையாகப் பயணிக்கக் கற்றுத் தந்தார் அவனது சித்தப்பா. மாமனும், சித்தப்பனும் கவனித்துக் கொண்டதால் அவனது அப்பா, அந்தச் சிறுவனை அவனது போக்கில் விட்டுவிட்டார்.

காட்டாற்று வெள்ளம் போல ஓடி அவன் தன்பால் மனிதர்களை ஈர்க்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அவன் சந்தித்த சிக்கல்கள், தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் அனைத்தையும் அவனைச் சுற்றியிருந்த நல்மனிதர்கள் நீக்கி அவனை ஆசுவாசப் படுத்திப் போட்டார்கள். இன்று அவன் தன் சகமனிதர்களை நேசிக்கத் துவங்கியிருக்கிறான். அவனையும் மக்கள் நேசிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவனுடைய அப்பாவின் பெயர் தியாகி. தர்மராஜ் ( மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், தன்னுடைய சம்பாத்தியம் தனக்கானது இல்லை என்று )

என்னை செழுமைப்படுத்திய ஆத்துமாக்களில் நிறைய பேர் இன்று வெகு தூரத்தில் இருக்கிறார்கள். மனஸ்தாபங்களும், பேசிய வார்த்தைகளும், பேசாமல் விட்ட நியாயங்களும், கேட்காத மன்னிப்புகளும் மனிதர்களை வேற்று திசைக்கு அனுப்பி வைத்துவிடுகின்றன.

மன்னிப்பு தினம் முடிந்து நாட்கள் ஆகிவிட்டன. நான் மன்னிப்பு கேட்க வேண்டியவர்களின் பட்டியல் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறதென்றாலும், நான் இன்னமும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவில்லை. என்னை தாயாய், தகப்பனாய் வளர்த்தெடுத்த மாமன்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் அனைவரும் என்னுடைய தவறுகளை மன்னித்து விடுங்கள். நான் என்பது நான் அல்ல! நீங்கள்தான்! நீங்கள் யாதொருவரும் இல்லையென்றால் நான் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறேன்.

அண்ணன்கள், தம்பிகள், நண்பர்கள், அம்மாக்கள், அப்பாக்கள், சக பிரயாணிகள், அக்காமார்கள், தங்கைமார்கள், காதலிகள், மனைவி (இங்கு பன்மை முதுகைப் புண்படுத்தும்) என்று அனைவரும் இல்லாமல் நம்மால் இங்கே எதையும் சாதிக்கவே முடியாது என்று நான் நம்புகிறேன். உலகம் மிகவும் சிறியது என்பதை நான் அனுதினமும் உணர்ந்து கொண்டேயிருக்கிறேன். ஆகையால் நான் இன்னமும் கூடுதலாக மனிதர்களை நேசிக்க அதிக சக்தி வேண்டும். பொறுமை வேண்டும்.

ரயில்வே ஸ்டேஷனில் பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் ஒருத்தியை நான் வீடியோ எடுத்து என்னுடைய நேரத்தை நான் ஏன் செலவழிக்க வேண்டும்? அவளைப் புகழின் வெளிச்சத்துக்குக் நான் ஏன் கொண்டு போக வேண்டுமென அந்த யாத்திரீகன் நினைத்திருந்தால் இன்று அந்தப் பாடலை நாம் கேட்டிருக்க முடியாது. வாழ்த்துகள் ரானு மரியா மொண்டல் அம்மா ! நன்றிகள் ஹிமேஷ் ரேஷ்மியா சகோதரனே ! உங்கள் சந்ததிகள் தழைத்தோங்க ஒரு சகோதரானாய் நான் இறைவனை வேண்டுகிறேன் !

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment