Tamil Sanjikai

அத்தியாயம் 1 - நிலம் எங்கள் அதிகாரம்

நிலம் என்பதுதான் ஆகப்பெரிய போர்களின் வரலாற்றுக் காரணங்கள். மண் , பெண் , பொன் இவைகளுக்காகத்தான் மனிதர்கள் தாங்கள் தோன்றிய காலத்திலிருந்தே அடித்துக் கொண்டு சாகிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இவ்வுலகைக் கட்டமைக்கப் போராடி , பல்வேறு வழிகளில் யுதரல்லாதோரை இம்சித்தும், இச்சித்தும், வஞ்சித்தும் வாங்கிய நிலங்களுக்குண்டான நோக்கம் நாட்டுக்கு நாடு வேறுபடும். வரலாறால் சிதறடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் ஒளிந்து கொண்டு, வாழ்வுக்கும், சாவுக்குமிடையில் போராடி, தங்களுக்கான நிரந்தரமான ஒரு நாட்டை உருவாக்கி, தங்களுடைய புனித நகரமான எருசலேத்தைக் கைப்பற்றி என்று.... அவர்களின் போராட்டமே ஒரு மிகப்பெரிய கண்ணீர் வரலாறு.

ஆனாலும் கூட அவர்களே உலக தேசங்களை ஆள்கிறார்கள். எப்படி என்கிறீர்களா ? அதுதான் கார்ப்பரேட்நிறுவனங்கள் . கார்ப்பரேட் என்ற ஒன்றே யூதர்கள்தான். வங்கிகளை உருவாக்கியவர்கள் யுதர்களே. வங்கிகளை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே நிலங்களைச் சேர்ப்பதற்குத்தான். யூதேயா தேசத்தின் சிதறலுக்குப் பின் தங்கள் நிலங்களை மீட்டெடுக்க வங்கிகளின் மூலமாக பணம் கடன் கொடுத்து , அதைத் திரும்பக் கட்டாதவர்களின்
நிலங்கள் யூதர்களால் பறிக்கப்பட்டன. மீண்டும் யூதர்கள் அங்கிருந்து துரத்தப் பட்டார்கள்.

இங்கே கதை வேறு. கைபர், போலன் கணவாய்களின் கொடுங்காற்றுக்குத் தப்பி ஓடி வந்த ஆரியர்கள் அதாவது பெர்சிய யூத, ஆரிய ஆண்கள் ( பெண்கள் வரவில்லை என்பது முக்கியம் ) பாரத தேசத்தில் நுழைந்து, இங்கே கலந்து, தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொண்டு ( பெண்கள் இல்லாமல் இனவிருத்தி எப்படி ? என்ற கேள்வி எழாதவர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம் ) ஏனையோரை தரம் பிரித்து, சாதியாயும், மதமாயும் வேறுபடுத்தி தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு சாகக் காரணமாயிருந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை பாரதம் ( இந்தியா அல்ல ) இப்படித்தான் இருக்கிறது.

அத்தியாயம் 2 - நிலம் எங்கள் உரிமை

என்னுடைய வாழ்விடத்தைப் பறித்து, என்னுடைய வாழ்வாதாரத்தைப் பிடுங்கி விட்டு என்னை வாழச் சொன்னால் நான் எங்கே வாழ்வேன் ? காணி நிலம் என்பது என் கனவு என்றால் என் பெரும்பகுதியான உழைப்பு அந்தக் கனவுக்காகவே செலவிடப்படும். அந்த நிலத்தை என் கையை விட்டுப் பறிப்பது என் கனவுகளைப் பறிப்பது போன்றதல்லவா?

நாட்டின் வளர்ச்சிதான் மக்களின் வளர்ச்சி எனும்போது மக்களை அழித்து அந்த மண்ணாங்கட்டி நாடு எதற்கு வளர வேண்டும்? கட்டிடங்கள்தான் உங்கள் வளர்ச்சி என்றால் சுடுகாட்டில் போய் கட்டிடம் கட்டுங்கள்.
தங்கள் நிலங்களை இழந்து , வீடுகளை இழந்து வாடகை வீட்டில் அல்லது சாலையோரத்தில் உறங்குபவனுக்குக்கான கனவுகள் நிலம்தானே ? சொந்த நிலம்....

நீங்கள் சொல்லும் சேரிகள் என்பதன் பொருள் சேர்ந்து வாழும் இடம் என்பதுதானே ஒழிய நீங்கள் கடந்து செல்லும் போது மூக்கைப் பொத்திக் கொள்வதற்கான குறியீடு அல்ல... நீங்கள் சொல்வது போல கட்டிடங்கள் நகரத்தின் அடையாளமல்ல... உங்கள் கட்டிடங்களுக்காக தங்கள் நிலத்தை , தங்கள் அடையாளங்களை இழந்து உங்கள் வீட்டுக் கழிவுகள் பயணிக்கும் ஏதோவொரு நீர்ப்பாதையின் கரையில் உங்கள் கழிவுகளின் துர்நாற்றங்களை சகித்துக் கொண்டு உங்களைப் போல மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் வாழும் மனிதர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை உங்களுக்கு யார் இடித்துரைப்பது ?

அத்தியாயம் 3 - இரட்டைக்குவளை

காசே கொடுத்து வாங்கிக் குடித்தாலும் முதல் குவளையில் குடிப்பவர்களுக்கு கரிகாலன் எமன். டீக்கடையின் வெளியே கயிற்றில் தொங்கும் இரண்டாவது குவளையில் குடிப்பவர்களுக்கு கரிகாலன் கோலாகலன்.

அத்தியாயம் 4 - சில்வர்ஸ்பூன் சில்பாகுமார்

நீங்கள் நினைப்பது போல சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு துரோகி அல்ல... அவர் ஒரு அப்பாவி மனிதர். சிங்கக்குகையின் வாயிலில் அடுப்பு போட்டு சப்பாத்தி சுட்டதுதான் அவர் செய்த ஒரே தவறு. இங்கு இரண்டு பிழைகள் நடந்திருக்க வேண்டும். ஒன்று அவரின் கையிலிருந்த 'காலா' படத்தின் வசனத்தாள்களை பா.ரஞ்சித் திரும்ப வாங்கவில்லை அல்லது சென்சார் போர்டில் இருக்கும் பக்தாள்கள் தங்கள் அஜெண்டாவிற்கு எதிராக தங்கள் ஆளே குரல் கொடுத்திருப்பதைக் கண்டு திகைத்து, ரஜினிக்கு ஒரு செயற்கைக் காய்ச்சலுக்கு ஏற்பாடு செய்து, வசனம் எழுதிக் கொடுத்து, தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அப்போதுதானே படத்துக்கு படையல் வைக்கலாம். படத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி போராட்டத்தைத் திசை திருப்புவார்கள். அதுதான் நிஜத்தில் நடந்துவிட்டதாக ரஜினி கருதி விட்டாரோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

போலீசுக்கு ஆதரவாக பேசிவிட்டு தன் பட ரிலீசன்று போலீசைத் திரையரங்கத்துக்குக் காவலர் படை பாதுகாப்பு வைக்கும் அளவுக்கு இக்கட்டுக்குத் தள்ளப்பட்டார் அப்பாவி மனிதர். இதற்கு அர்த்தம் என்னவென்றால் இனிமேல் படத்தின் கதையையும் ,
படத்தில் தான் பேசவிருக்கும் வசனத்தையும் கன்னடத்தில் கேட்டு, படித்து விட்டே நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். நிஜ ரஜினி கரிகாலன் அல்ல... கரிகாலன் நிஜ ரஜினி அல்ல என்பது அவரது சமீபத்திய செயல்பாடுகளில் வெளியாவது இவ்வளவு பெரிய ஒரு ஸ்டார் வேல்யு நடிகருக்குக் கிடைத்திருக்கும் கரும்புள்ளி என்பது வேதனையே !

படத்தில் ரஜினி ஒரு காட்சியில் தண்ணியடித்து விட்டு போலீஸ் ஸ்டேஷனில் மந்திரி சாயாஜி ஷிண்டேவை யாரு இவரு ? என்று கலாய்ப்பார். ஆனால் நிஜத்திலும் ரஜினிக்கு அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்கும் என்று ரஜினிக்கோ , ரஞ்சித்துக்கோ கனவிலும் கூட தெரிந்திருக்காது. காலம் ஒரு வட்டம் மட்டுமல்ல அது ஒரு படுகுழியும் கூட. ரஜினிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

மொத்தத்தில் படத்தில் கரிகாலன்தான் மாஸ். கரிகாலனைத் தூக்கி சாப்பிடும் செல்விதான் காலாவின் செகண்ட் டைட்டில். ஈஸ்வரி ராவ் பிச்சி உதறுகிறார். பின்னே பாலுமஹேந்திரா கண்டெடுத்த முத்து என்றால் சும்மாவா ? படத்தில் சொல்வது போல ஆளும் வர்க்கமோ , அதிகார வர்க்கமோ மட்டும் நம் நிலங்களை அபகரிக்கவோ , ஆக்கிரமிக்கவோ செய்யும் என்று எண்ணாதீர்கள். தன்னுடைய வயல் வரப்பை வெட்டித் திருத்தும் போது மண்வெட்டியை கொஞ்சம் நீட்டிப் போட்டு வெட்டுவீர்களானால் நீங்களும் ஒரு ஹரிதாதாவே ! தன் சொந்தத் தம்பிக்கு நியாயமாய்ப் போய்ச் சேர வேண்டிய தன்னுடைய தாத்தாவின் சொத்தை ஆட்டையைப் போடும் அத்தனை பேரும் காலாவுக்கு எதிரிகள்தான். கியாரே ? புரியிதா ?

அத்தியாயம் 5 - கலையும் , போராட்ட வடிவமும்.

கலை என்பது தொடர்பியலின் முக்கியமான அங்கம். ஆதியிலிருந்தே போராட்டங்களின் வடிவத்தில் கலை அட்டகாசமாக இணைந்து கொண்டு பிரயாணித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டம் துவங்கி இப்போது நடக்கும் நீட் போராட்டம் வரைக்கும் கலை போராளிகளின் தலைக்குள் ஒளிந்து கொண்டு தலை காட்டிக் கொண்டிருந்திருக்கிறது. ஓ.பி.எஸ்ஸு கெத்து.... ஈ.பி.எஸ்ஸு வெத்துன்னு எதுகை மோனையோடு கொஞ்ச நாளுக்கு முன்னால் அதிமுகவின் இரண்டாவது அணியால் பாடடப்பட்ட பாடல் போராட்டத்தின் கலைவடிவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.இப்படி நிறைய சொல்லலாம். கார்ட்டுனிஸ்ட் பாலா ஆட்சியாளர்கள் ஜட்டியில்லாமல் நிற்பது போல வரைந்து சிறைபுகுந்த ஓவியக்கலை துவங்கி டாஸ்மாக் பாடல் புகழ் தோழர் கோவன், தூத்துக்குடிக்கு வந்து சூப்பர் ஸ்டார் வந்து சிரித்துப்பேசி ( நடிப்புக்கலை )
வசவு வாங்கிச் சென்றது, மோடி தான் ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறி அழுதது , எச்.ராஜாவின் அட்மின் ( பொய்யும் கலையே) , அரசியல்வாதிகளின் ஊழல் ( களவும் ஒரு கலை என்பதை நாம் மறந்து விடக்கூடாது) என்று கலைக்கு எல்லையே கிடையாது)
இப்படி நிறையச் சொல்லலாம்.

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த படமா என்று கமலஹாசனின் பாணியில் சொல்வதென்றால் , அப்படியும் சொல்லலாம் , அப்படியில்லை என்றும் சொல்லலாம் , ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் அவ்வளவு ஏன் ஏலியன்களுக்கான படம் என்றும் சொல்லலாம்.
ரஞ்சித்தின் சினிமா சாதிவெறி சினிமா என்றால் பாரதிராஜா, அமீர் , கமலஹாசன் படங்கள் எல்லாம் என்ன பிரிட்டானியா பிஸ்கட்டா ? ரஞ்சித்தின் சினிமா என்னை உறுத்தவில்லை ரஞ்சித்தின் சாதிதான் என்னை உறுத்துகிறது என்றால் ரஞ்சித்தால் சினிமா என்ற கலைச் செருப்பை வைத்தே உங்களை தடவிக் கொடுக்க வேண்டும். ரஞ்சித்தின் சினிமா உங்களைக் காயபடுத்தினால் சந்தேகமேயில்லை நீங்கள் ஒரு சமூகப் போராளி ( குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பூராளி ).

அத்தியாயம் 6 - கரியும், குறியும்

உலகமே குறியீடுகளால் ஆனதுதான். ஆணுறுப்பு நிமிர்ந்த முக்கோணமும் , பெண்ணுறுப்பு தலைகீழ் முக்கோணமும், இரண்டையும் ஒன்று சேர்த்தால் இஸ்ரேல் நாட்டுக் கொடியின் ஆறுமுனைச் சக்கரமும் வந்தால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது, அதை வடிவமைத்தவர்தான்
காரணம். மதங்களும் குறியீடுகள் சார்ந்ததுதான். சிலுவை , ஓம் , ஸ்வஸ்திக் சக்கரம் , இலுமினாட்டிகளின் ஒற்றைக்கண் , சைத்தான் கி பச்சாவின் 666 என்று குறியீடுகளின் பட்டியல் நீ.....ளம். ஒவ்வொரு குறியீட்டுக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு என்பதை
வரலாறு சொல்லும் அல்லது ஹிட்லர் சொல்வார்.

நீங்கள் பரிசுத்தமான பக்திமான்கள் என்று சொன்னால் உங்கள் பாக்கெட்டில் கூகிள் குரோம் வடிவில் சாத்தான் சம்மணமிட்டு அமர்ந்திருப்பான். இல்லை நான் ஆப்பிள் போன் வைத்திருக்கிறேன் என்றாலும் சாத்தானால் ஏவப்பட்டு ஆதாம் கடித்த ஆப்பிள் போனில் பின்பக்கம் இருக்கும்.

ஹிட்லரின் ஸ்வஸ்திக் சக்கரத்தில் அழிக்க முடியாத ரத்தக் கறை உண்டு.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் ஆங்கிலச் சுருக்கம் MNM. இதை நீங்கள் சரளமாக உச்சரித்தால் எமினெம் என்று ஒலிக்கும். எமினெம் யாரென்று கூகுளில் தேட வேண்டாம்.

இப்படி காலாவில் நிறைய குறியீடுகள் உண்டு. கருப்புச்சட்டை , வெள்ளை சட்டை , மனு பில்டர்ஸ், நீல, சிவப்பு ,மஞ்சள் , கருப்பு வர்ணப் பொடிகள் காவி போஸ்டர்களில் நானா பட்டேகர் என்று ஏராளம்.

அத்தியாயம் 7 - தமிழ்நாட்டு நாம்ஸ்டர்டாம்ஸ்

தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் துப்பாக்கிச்சூட்டை முன்கூட்டியே கணித்து படமாக்கியிருக்கிறார்கள். இந்த அதிகார வர்க்கம் எந்த எல்லைக்கும் போகும் என்பதை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். கதை நடக்கும் தாராவியை தமிழ்நாடு எனக்கொள்க..படம் வந்தபின்பு துப்பாக்கிச் சூடு நடந்திருந்தால் பா.ரஞ்சித் கலவரத்துக்கு வியுகம் அமைத்துக் கொடுத்தவர் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருக்கக் கூடும். நல்லவேளை !

அத்தியாயம் - 8 - காலா என்ற கரிகாலன்

ஆதிகாலம் தொட்டு சமகாலம் வரையில் தொடரும் நில அரசியலைக் கையில் எடுத்ததில் இயக்குனர் பா.ரஞ்சித்தை திட்டித் தீர்த்தே ஆக வேண்டும். அது எப்படி பம்பாயின் வண்ணாரப்பேட்டை பம்பாய்க்கு அழகு சேர்க்கும் ரஞ்சித் அவர்களே ? அதை இடித்து விட்டு பெரிய கட்டிடங்களும் , கோல்ஃப்
மைதானமும் கட்டினால் அது மும்பை நகரத்துக்கு எத்தனை அழகு சேர்க்கும் விஷயம்? அழுக்கு நிறைந்த மக்களை எப்படி சரிசமமாக வைத்துக் கொண்டாட முடியும் ? அவர்கள் என்ன எங்கள் துணிகளைத் தொட்டு துவைப்பது ? அது தீட்டல்லவா ? நாங்கள் வாஷிங் மிஷனில் துவைத்துக் கொள்கிறோம் ?எங்கள் கழிவுகளைக் கூட நாங்களே அள்ளிக் கொள்கிறோம் என்று நாங்கள் சொல்லும்போது நீங்கள் இப்படிப்பட்ட படங்களை எடுப்பதை நிறுத்திவிட வேண்டும்.

ஹரிதேவ் அப்பியங்கர் யாரோ ஒருவரை நியாபகப் படுத்துவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. பாத்திரத்தின் பெயரிலேயே ரஞ்சித்தின் உக்கிரம் தெரிகிறது. ரஜினியும், நானா படேகரும் சந்திக்கும் இடங்களில் மின்னல் தெறிக்கிறது. வெள்ளை வர்ணத்துக்கும், கருப்பு வர்ணத்துக்குமான எதிர் உரையாடல்கள்தான் இந்த உலகின் இப்போதைய நிலை.

அரசியல் பேசுவது அதுவும் தெளிவாக அரசியல் பேசுவது அதிலும் அதை ஒரு சினிமா மூலம் பேசுவது என்பது சிக்கலானது என்ற போதிலும் இப்படம் வெளியானது ஆச்சரியமான ஒரு விஷயம்.

ரஜினியின் குடும்பத்தை ஒரு இயல்பான , அழகான வழக்காடல்களோடு காட்டியது எத்தனை நெருக்கமான உணர்வு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். படத்தில் இடம்பெறும் வேறெந்த சமூகத்திலும் இல்லாத இயல்பான தமிழ்ச் சமூகத்தின் பேச்சு வழக்குகள் , பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்துக்கு கை தட்டிக் கொண்டே இருக்கலாம்.

இடுப்புக்குக் கீழே இருக்கும் ஆடையைக் காவலர்கள் உருவிய பின்னும் தன்னுடைய அரைநிர்வாணத்தை மறைக்காமல் கம்பை எடுத்துச் சுழற்றும் பெண் எத்தனை நெஞ்சுரம் கொண்டவள் ? சபாஷ் ரஞ்சித் !

தன்னுடைய கணவன் தன்னுடைய பழைய காதலியோடு காட்டும் நெருக்கத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் தனக்கும் ஒரு பழைய காதலன் இருப்பதாகச் சொல்லி அவனைக் கடுப்பேற்றும் பெண்தான் எத்தனை அழகானவள் ?

தன்னுடைய நிச்சயதார்த்தத்தின் போது நடந்த கலவரத்தில் தன்னை விட்டுப் பிரிந்து போன ,தன்னுடைய பழைய காதலனைக் காணும் அழகாய்த் திகைத்து விக்கித்து நின்று, அவனது கையில் தன்னுடைய பெயரை பச்சை குத்தி வைத்திருப்பதைக் கண்டு அதைத் தொட்டு ஸ்பரிசித்து விட்டு , அதே முன்னாள் காதலன் தன்னுடைய மனைவி இதனால் வருந்துவாள் என்று சொன்னதும் எதிர்ப்பு முகம் காட்டும் பெண்தான் எத்தனை தீர்க்கமானவள் ?

அழகான பாத்திரப் படைப்புகள். டெக்னிகலாக தனித்தனியாக யாரையும் பாராட்ட வேண்டியதில்லை. சண்டைக் காட்சிகளாகட்டும் , ஒளிப்பதிவாக இருக்கட்டும் , இசை மற்றும் எல்லா விஷயங்களும் அபாரமாக இருக்கிறது.

ரஜினி ஏன் இத்தனை நாளும் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கிறார் என்பது அவர் திரையில் தோன்றும் காட்சிகளில் தெரிகிறது. பஞ்ச் டயலாக்குகள் எதுவுமின்றி மனிதர் அசால்ட்டாக நடித்திருக்கிறார். மனைவியையும், மகனையும் இழந்து புலம்பும் இடத்தில் பெரும்பாலான தனிமை அப்பாக்களை நினைவு படுத்துகிறார்.

ஹியுமா குரேஷி அலட்டலில்லாத நடிப்பில் நிற்கிறார். வீரப் போராளியாக அஞ்சலி பாட்டீல் அமர்க்களம்.

நானா பட்டேகர் சொல்லவா வேண்டும் ? தன்னுடைய பேத்தி அவரிடம் காலாவை யாரென்று கேட்பார் , அதற்கு நானா சொல்வார் அது ராவணன் என்று , அதற்கு பேத்தி ராவணன் கெட்டவனா? அவனைக் கொல்லப் போகிறீர்களா என்று கேட்டதற்கு நானா,

என்ன பண்றது ?
வால்மீகி எழுதி வச்சிருக்கானே ? கொன்னுதானே ஆவணும் ?

என்று சொல்லிவிட்டு வெடிச் சிரிப்பு சிரிக்கும் இடத்தில் சொல்லப்படும் அரசியல் மிகப்பெரியது. போராட்டக் களத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்யும் போது நானா பட்டேகர் வீட்டில் இராமாயண உரை நடந்து கொண்டிருக்கும் காட்சி அசத்தல். இதையும் அதையும் மாற்றி மாற்றிக் காட்டும் காட்சியில் ஏனோ ஒரு இயலாமை வந்து தொற்றிக் கொள்கிறது.

கற்றவை பற்றவை என்று சொல்லத் துவங்கும் போது கற்றால்தானே பற்றவைப்பாய்? என்று இந்த அதிகார மையம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பது எத்தனை ஆபத்தானது ?

ஒரு காட்சியில் ரஜினியின் மகன் சேரி என்று சொன்னதும் ரஜினி அவனது வாயிலேயே ஒன்று போடுவார். அந்த வார்த்தை எத்தனை வலி மிகுந்தது என்பது அறிந்தோர்க்கு மட்டுமே வலிக்கும். அந்த வலியை இயக்குனர் அழகாக பார்வையாளனுக்குக் கடத்தியிருப்பார்.கிளைமாக்சில் செத்துப் போன காலாவை உயிரோடு இருந்து அங்கிருக்கும் அத்தனை மனிதர்களும் காலாவாகி வில்லனைக் கொல்லும் காட்சி அழகான கதை சொல்லல் யுக்தி ! போராளிக்கு சாவே இல்லை என்பதை அந்தக் காட்சியின் மூலம் அழகாய்ச் சொல்லியிருப்பார் இயக்குனர்.

எல்லா கூட்டத்திலும் கொஞ்சம் குள்ளநரிகள் இருக்கும் என்பதை ஒருசில கதாபாத்திரங்களின் மூலம் உணர்த்தியிருப்பது கோபமுகம். சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த் ஆகாஷ் மக்களின் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் நின்று கொண்டு
போராட்டத்துக்கு ஆதரவாக வந்து கூட்டத்தில் நின்று பேசுவார். அவரை அடுத்த காட்சியில் சுட்டு இந்த சமூகம் தங்களை எதிர்ப்பவரது ஆதரவாளர்களை என்ன செய்யும்? என்று பதைபதைப்பாகக் காட்டியிருப்பார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சீருடையோடு கலந்து கொண்டு பேசிய காவலரின் உண்மை நிலை
என்னவானதோ என்ற பயம் எனக்கு எழுந்து விட்டது.

சமகாலத்தில் எதிர்ப்பு அரசியல் பேசிய இரண்டு படங்களில் ஒன்று காலா ! இன்னும் பச்சையாகப் பார்க்க வேண்டுமானால் மலையாளத்தில் வெளியான ஒழிவு திவசத்தே களி பார்க்கலாம். எந்த ஆர்ப்பாட்டமும் , பின்னணி இசையும் இன்றி ஒரு அதிகாரப் படுகொலையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

அதிகாரம் 9 - முன்னுரை

இந்த பிரச்சனைக்கெல்லாம் முடிவுரை எழுதவே முடியாதென்றாலும் கூட இது என் சகோதரன் ரஞ்சித்தின் முன்னுரை என்பதில் எனக்குப் பெருமையே ! தொடர்ந்து அடித்துக் கொண்டே இரு !

இந்த சமூகத்தின் பிரச்சினையே யார் முதலில் ஆரம்பிப்பது என்பதுதான். அதை சத்தமாய் ஆரம்பித்து முன்னேடுத்திருக்கிறாய் என் அன்புச் சகோதரனே ! ஒடுக்கப்படும் மக்களின் ஒட்டு மொத்தக் குரலாய் ஒலித்திருக்கிறான் காலா !

அதிகாரம் 10

ரஜினி - கரிகாலன்
ரஞ்சித் - எமகாலன்

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment