மனிதனுக்குள் இருக்கும் சொல்லெண்ணா வன்மமும் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் குரூரமும் எளியவன் ஒருவன் சிக்கிக் கொண்டால் அது எப்பேர்ப்பட்ட வன்முறையை வெளிப்படுத்தும் என்பது தான் ஜல்லிக்கட்டு. அது கூலி உயர்வு கேட்டு போராடும் ஒடுக்கப்பட்டவனாகவோ, ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுக்கும் மாற்று இனத்தவனாகவோ, கசாப்பு கடையில் இருந்து தப்பி ஓடும் எருமையாகவோ, வேறு எதுவாகவோ வேண்டுமானலும் இருக்கலாம்.
எருமையைக் கொன்று அதன் இறைச்சியை வெட்டி கடையில் விற்பதையும் டோர் டெலிவரி செய்வதையும் விவரிக்கும் அந்த முதல் ஐந்து நிமிட காட்சியில் தீபு ஜோசபின் எடிட்டிங் அபாரம். அந்த ஐந்து நிமிடங்களுக்குள் படத்தில் வரும் அனைத்து முக்கிய கேரக்டர்களும் அறிமுகப் படுத்தப் படுகிறது.
வீட்டில் 'இன்னைக்கும் புட்டா'ன்னு மனைவியை அடித்து வீரம் காட்டும் ஒருவன் இறைச்சி வாங்கும் போது 'நாய்க்கு சக்கை'ன்னு கேட்டு பின் 'சூப்புக்கு' கேட்கும் போது வர்க்கி தன் வேலையாளைப் பார்த்து திட்ட அவன் பயந்து போவது,
சர்ச் ஃபாதருக்கு இலவச தொடைகறி,
ஒருவன் 'இங்க ஏன்டா கொண்டு வர்ற, பின்னாடி போ'ன்னு சொல்லி உள்ளே மனைவியை பார்த்து 'கறியில் தேங்காய்ப்பால் ஊத்தி செய்"ன்னு சொல்வது,
வர்கியின் தங்கை அன்டனியைப் பார்த்து கிழங்கை நறுக்குவது,
ரப்பர் எஸ்டேட் முதலாளி மகளின் நிச்சயதார்த்த விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிப்பது,
'நக்சல் பிரபாகரன் வீட்டுக்கே பேங்க் நோட்டீஸா?' என கேட்பவரின் பேச்சை புறக்கணித்து சுவற்றில் நோட்டீஸ் ஒட்டுவது என சில நிமிடங்களில் இது வேற படம் என்பதை உணர்த்தி விடுகிறார்கள்.
வெட்டி வைத்த எருமைத் தலையில் ஈக்கள் மொய்ப்பது, மரத்தில் ஊறும் கம்பளிப்பூச்சி, மண்புழுவின் நகர்தல், ராக்கோழி மற்றும் காடுகளில் இரவுப் பூச்சிகளின் சப்தம், எரியும் நெருப்பிலிருந்து சிதறும் துளிகளின் சத்தம் என திரையில் தெரியும் ஒவ்வொரு அசைவிலும் ரெங்கநாத் ரவியின் ஒலிப்பதிவு உச்சம்...
S.ஹரீஷின் 'மாவோயிஸ்ட்' சிறுகதையே படமாக... கசாப்பிற்காக வெட்டப்பட இருந்த எருமை கடைசி நொடியில் தப்பியோட அதை ஒவ்வொருவராக துரத்த ஆரம்பிக்க... பால் பூத், சோன்பப்டி வண்டியைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கொடிக்கம்பத்தை இடிக்க கொடி கீழே விழுந்து எருமையின் முகத்தை மறைக்க, டீ கடை, வங்கி என உள்ளே புகுந்து பின் தப்பி ஓடுகிறது. கோபத்துடன் மேலும் கூட்டம் சேர்ந்து துரத்துகிறது, ஏலக்காய் தோட்டம், வாழைத் தோட்டம் என எருமை ஓட, வதங்கிய பயிரைக் கண்ட கூட்டம் மேலும் காண்டாகி முன்பை விட அதிக வெறியுடன் துரத்துகிறது. அனைவரும் பாதுகாப்பாய் இருக்கும்படி ஊருக்குள் எச்சரிக்கை விடுக்கப் படுகிறது.
இசைக்கருவிகளைத் தவிர்த்து கிட்டத்தட்ட முழுப் படத்திற்கும் மனிதக் குரல்களையும் பிற சப்தங்களையுமே பின்னணி இசையாக உபயோகப் படுத்தியுள்ளார் பிரசாந்த் பிள்ளை... ஒவ்வொரு முறையம் அந்த கடிகாரச் சத்தம் பின்னணி வருவது ஏதாவது ஒரு சம்பவத்திற்கு அறிகுறி போல...
இங்கு அந்த எருமையை மாவோயிஸ்ட்டாகவோ துரத்தும் மக்களை அரசாங்கமாகவோ பார்ப்பவர்களுக்குத் தோன்றலாம். இதற்கிடையில் ஜெயிலில் இருந்து திரும்பி வந்த குட்டச்சன் என்பவனுக்கும் இந்த அசைன்மென்ட் தரப்படுகிறது, லோக்கல் போலீசால் முடியாததால் அதிரடிப்படையை வரவைத்து தேடுதல் வேட்டையை நடத்துவது போல்...
படத்தின் மிகப் பெரும் பலம் ஒளிப்பதிவு... அங்கமாலி டைரீஸிலேயே பல நீண்ட சிங்கிள் ஷாட்கள் எடுத்திருந்தாலும் ஜல்லிக்கட்டில் இன்னும் பல படிகள் மேலே... வைக்கோல் போர் தீ பிடிக்க ஒரு சிறுவன் மூலம் அத் தகவல் பரவி மக்கள் திரண்டு வருவது, ரப்பர் எஸ்டேட் முதலாளி ஒரு பக்கம் உள்ளே சென்று குடித்தபடியே சமையல் கான்ட்ராக்டருடன் பேசுவது, ஏலக்காய் தோட்டத்தில் எருமையைத் துரத்திக் கொண்டு மக்கள் ஓடுவது, பூமாலைக்கார குடிகார கும்பல் கம்யூனிஸ்டுகளுடன் தகராறு செய்வது என பல காட்சிகளை உதாரணமாய் சொல்லலாம்...
தொடர்ந்த துரத்தலில் ஓர் உயிர் பலியாகி விட மக்களின் மூர்க்கம் மேலும் அதிகமாகி என்னவானாலும் சரி எருமையைக் கொன்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் கும்பல் தாயாராக, போலீஸ் தடுக்க, போலீஸ் ஜீப் எரிக்கப்பட, பதிலுக்கு போலீசும் ஜீப்பை எரித்தவனின் வீடு சென்று அங்கிருந்த ரப்பர் ஷீட்டுகளை கொளுத்திப் போட்டு கும்பலோடு கும்பலாக மக்களின் வெறித்தனத்தில் கலந்து கொள்கிறது.
ஒரு காலத்தில் ரியல் டைமிங் என எடுத்து படுத்திக் கொண்டிருந்த மலையாள சினிமா இன்று டெக்னிகலாக பிற மொழிப் படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இங்கு டெக்னிகல் எனக் குறிப்பிடுவது படத்துக்குத் தேவையானதை மட்டுமே... உதாரணமாக என்னு நின்டே மொய்தீன், கும்பளாங்கி நைட்ஸ் படங்களின் லைட்டிங் மற்றும் ஸ்கின் டோன் உலகத் தரத்தில் இருக்கும். ஜல்லிக்கட்டிலும் அதே போல், குறிப்பாக இரவில் காட்டினுள் நடக்கும் தேடுதல் வேட்டையை படமாக்கிய விதம் அட்டகாசம்...
அது வரை குட்டச்சனை விரும்பிக் கொண்டிருந்த வர்க்கியின் தங்கையை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு அவளிடம் எருமை பள்ளத்தில் விழுந்ததை தான் பொறி வைத்து பிடித்ததாக சொல்லிக் கொள்ளும் அன்டனியை அவள் முதன் முதலாக 'விலா கறியை வீட்டுக்கு கொண்டு வா' என்கிறாள். சிக்மன்ட் ஃபிராய்ட் முதல் ஷாலினி வரை அந்தக் காலத்திலிருந்து பெண் இனம் பலசாலியான ஆணையே தேர்வு செய்கிறது என்று சொல்வதன் நீட்சியாக...
ஓர் எருமை மாட்டை பிடிப்பது என்பது அவ்வளவு பெரிய கஷ்டமான காரியம் அல்ல, அது நாம் துரத்தினால் மட்டுமே ஓடும்... மனிதனுக்குள் இருக்கும் சொல்லெண்ணா வன்மமும் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் குரூரமும் எளியவன் ஒருவன் சிக்கிக் கொண்டால் அது எப்பேர்ப்பட்ட வன்முறையை வெளிப்படுத்தும் என்பது தான் ஜல்லிக்கட்டு. அது கூலி உயர்வு கேட்டு போராடும் ஒடுக்கப்பட்டவனாகவோ, ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுக்கும் மாற்று இனத்தவனாகவோ, தேடப்படும் மாவோயிஸ்ட்டாகவோ, கசாப்பு கடையில் இருந்து தப்பி ஓடும் எருமையாகவோ, வேறு எதுவாகவோ வேண்டுமானலும் இருக்கலாம்.
பாராட்டுகள் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
- மலர்வண்ணன்
0 Comments