எனக்கும் சினிமாவிற்கும் 'ரசிகன்' என்பதைத்தாண்டி எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவ்வபோது கேள்விப்படும் கதைத்திருட்டு சம்பவங்கள் எனக்கே இவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கும் போது, ஒரு கதையை உருவாக்கி, அதைப் பல மாதங்கள் சுமந்து காத்திருக்கும் ஒரு படைப்பாளிக்கு அதை பறிகொடுக்கும் போது எத்தனை வேதனை இருக்கும்?
கதைத்திருட்டு
இதைத் தடுக்க வழியே கிடையாதா? தான் எழுதிய கதை தன் பெயர் போட்டு திரையில் வருவதை ஒருவன் காண்பதற்கு என்ன தான் வழி? யார் இதற்குப் பொறுப்பு? இந்தியாவில் மட்டும் தான் இந்தப் பிரச்சனையா அல்லது உலகளவில் இதே பிரச்சனை இருக்கிறதா?
பிரபல நடிகர்/இயக்குனர் படம் வந்தால் போதும் சீப் பப்ளிசிட்டிக்காகவும், மிரட்டி உருட்டி பாக்கியராஜ் சார் மூலம் 10 லட்சம் வாங்கிவிடலாம் என்பதற்காகவும் இப்படி குற்றம் சாட்டுவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது என்று ஜஸ்ட் லைக் தட் கடந்து போவது தான் இப்போது பேஷனாகிவிட்டது. கோடிகளில் சம்பளம் வாங்கும் பல இயக்குனர்களது படங்கள் முகம் தெரியாத பலரிடமிருந்து திருடப்பட்ட கதைகள் என்று தெரிந்தும் அவர்களது புகழுக்கோ, கிடைக்கும் வாய்ப்புகளுக்கோ எந்த பிரச்சனையும் வருவதில்லை. 'திருட்டுக்கதை எடுக்குறவன்' என்று பெயராகிவிட்டதே நாமே சொந்தமாக எழுதுவோம் என்று அவர்கள் முயற்சிப்பதும் இல்லை (இருந்தால் தானே வரும்), வாங்கும் கோடிகளில் சில லட்சங்களைக் கொடுத்து ஒரு கதையை லீகலாக வாங்கி எடுப்பதும் இல்லை. திருடன் என்ற பட்டம் தொடர்ந்து கிடைத்தாலும் 'கதை-திரைக்கதை' என்று போட்டுக்கொள்வதுதான் இவர்களுக்கு முக்கியம். கதை-திரைக்கதை தனி. இயக்கம் தனி. இதை அவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. அதே சமயம் 'கத்தி' கதை தன்னுடையது என்று சொன்ன இயக்குனர் கோபி மட்டுமே படம் இயக்கியிருக்கிறார். அவருக்கு முன்பும் பின்பும் புகார் சொல்லி தோற்ற/ஜெயித்த ஒரு நபருக்குக்கூட அடுத்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லையே ஏன்? கதையையும் தொலைத்துவிட்டு, புகார் சொன்ன காரணத்தால் சினிமாவில் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு அவர்கள் நிற்க வேண்டும் என்பது யார் எழுதிய விதி?
சினிமாக்காரன் எக்கேடு கெட்டுப்போனால் என்ன நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்று விலக முடியவில்லை. "இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமை" என்றெல்லாம் வெறுமனே உணர்ச்சி பொங்கப் பேசிவிட்டுக் கடப்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஓர் ஆதங்கம். ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியாதா என்கிற ஏக்கம். அதற்காகவே இந்தப் பதிவு. இதில் சக ரசிகராக உங்களது பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் கதைத்திருட்டு எப்படி நடக்கிறது?
ஆரம்ப நாட்களில் இருந்தே உங்களுடன் சேர்ந்து கதையை உருவாக்கியவர்களில் தொடங்கி, நீங்கள் நம்பி கதை சொன்ன ரூம் மேட்கள், நண்பர்கள், டெக்னீசியன்கள், ப்ரொடக்ஷன் மேனேஜர்கள், சக உதவி இயக்குனர்கள் என்று நம்பிய யார் வேண்டுமென்றாலும் உங்களது கதையைத் திருடலாம். 'வெள்ளித்திரை' படம் போல அவர்களே அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அடுத்தவருக்குக் கொடுக்கலாம்.
வாய்ப்பிற்காக நீங்கள் போய் கதை சொல்லும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் - கதை தேடி அலையும் அவர்களை உங்கள் கதை ஈர்க்கும் போது "நல்ல கதை வச்சிருக்கான், ஆனா புது ஆளா இருக்கான்... இவன் நம்பி எப்படி பணம் போடுறது?" என்ற கேள்வி எழுந்தால் - கதை திருடுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். நியாயமான ஆளாக இருந்தால் -"தம்பி உன் கதை நல்லா இருக்கு. ஆனா உனக்கு அனுபவம் இல்ல. கதைய நான் இன்ன ரேட்டுக்கு வாங்கிக்கிறேன். கிரெடிட் குடுக்குறேன். வேற ஆள வச்சு பண்ணுவோம். நீ படத்துல வேலை பாரு. அடுத்த படம் நீ பண்ணு" என்று ஏதாவது டீல் பேசுவார். இவ்வளவு சுற்றி வளைப்பதற்கு சிம்பிளாக கருவை மட்டும் திருடி, திரைக்கதையில் நாலு சீனை மாற்றி, இரண்டைச் சேர்த்தால் அது வேறு கதையாகிவிடும். இதில் சிலர் கதை வைத்திருப்பவனுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்து, அவனை மாதக்கணக்கில் காத்திருக்க வைத்து, அலைய வைத்து, சத்தமில்லாமல் கத்தியைச் சொருகிவிடுவார்கள்.
இப்படியாகத் தொடரும் திருட்டில் வேறு மாதிரியான பிரச்சனைகளும் உண்டு.
1) unique ஆன ஒரு ஒன்-லைன். உதாரணத்திற்கு. 'தன் ஓட்டை தொலைத்த ஹீரோ', - இந்த லைனை வைத்து ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் யார் வேண்டுமானாலும் இந்த லைனை யோசிக்கலாம். 'டைம் மெஷினைக் கண்டுபிடிக்கும் ஹீரோ' இதுவும் யுனீக் தான். ஆனால் எப்படி வேண்டுமானாலும் கதை பண்ணலாம். இப்படி ஒரே லைனை வைத்து பலர் கதை பண்ணுவதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?
2) முதல் பாயிண்டையே கொஞ்சம் மாற்றிச் சொல்வதென்றால்,
ஒரு பிரபலமான சம்பவம் (லலிதா ஜுவல்லரி) அல்லது கதாப்பாத்திரம் (திருவாரூர் முருகன்), பின்புலம் (street bike racing) அல்லது genre (sports, caste, time travel) போன்றவற்றில் பலர் கதை செய்வார்கள். யார் முந்திக்கொள்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள். வேறு பிரச்சனைகள் இருந்தாலும் NGK தோற்றதற்கு LKG முதலில் வந்ததும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்தக் குழப்பத்தைக் கண்டறிவது எப்படி?
3) ஒரு ரெகுலர் டெம்ப்ளேட் கதை. ஸ்போர்ட்ஸ் டிராமா. 20 சீன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் 10 டெம்ப்ளேட் சீன்கள் அவசியம் இருக்கும். மிச்சமிருக்கும் 10 சீனில் தான் வித்தியாசம் காட்ட முடியும். அந்த முக்கியமான சீன்களை மட்டும் திருடி புட்பால் என்பதை கபடி என்று மாற்றித் திருடுவதைத் தடுப்பது எப்படி?
4) ஒரு பிரபல படம்/கதை. உதாரணத்திற்கு Devotion of Suspect X. அதற்கு அப்படியே திரைக்கதை எழுதுகிறார் ஒருவர் - தமிழில் கொலைகாரன் (2019). கதையில் இன்ஸ்பயர் ஆகி கருவை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையை ஒருவர் எழுதுகிறார், தமிழில் பாபநாசம் (2015). வெவ்வேறு காலகட்டத்தில் வந்ததால் ஓக்கே. ஒரே சமயம் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் எழுதிக்கொண்டிருந்தால் அதைஜ் கண்டுபிடிப்பது எப்படி?
5) உள்நாடோ அல்லது வெளிநாடோ ஒரு கதை/நாவல்/சினிமா/நாடகம்/சீரீஸ் - அதன் ரீமேக் உரிமை விற்கப்பட்டுவிட்டதா, பட்டிருந்தால் யாரிடம் போன்ற விபரங்களை அந்த சம்பந்தப்பட்ட பதிப்பகம்/தயாரிப்பு நிறுவனத்தை நேரிடையாக கேட்டுத் தெரிந்து கொள்வதைத் தவிர வேறேதும் வழிகள் உண்டா?
ஒரே வெளிநாட்டுப் படத்தை இருவர் காப்பியடித்து கதை தயார் செய்து சண்டையிடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது தனி கதை. திருட்டுக்கதைக்கு சண்டை. Faceoff - போகன் பிரச்சனை போல.
100 ஆண்டுகளைக் கடந்து விட்ட ஒரு தொழில். வருடாவருடம் பல நூறு கோடி ரொடேசன் ஆகிறது. பலரது தலையெழுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாற்றி எழுதப்படுகிறது. ஆனால் அடிப்படை பிரச்சனையான 'கதை' யில் நடக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இங்கு என்ன தான் தீர்வு?
ஹாலிவுட்டை எடுத்துக்கொள்வோம். அங்கு கதை திருடப்பட்டது என்று தெரியவந்தால் சொத்தை எழுதி வாங்காமல் விட மாட்டார்கள். இங்கு கட்டப்பஞ்சாயத்து, காம்ப்ரமைஸ் மட்டும் தான். நம்மூரிலுக் சட்டம் உண்டு. Section 63 of the Copyright Act. குற்றவாளிக்கு ஓராண்டு சிறை, அபராதம். ஆனால் இதுவரை இப்படி கேஸ் போட்டு ஜெயித்த ஒருவனைக் கூட நாம் பார்த்திருக்க முடியாது. சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். யாருக்கு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க நேரம் இருக்கிறது? சங்கங்களே அதிகாரப் போட்டி நடக்கும் இடமாக இருக்கும் பொழுது அதில் வரியவருக்கு நியாயம் எப்படிக் கிடைக்கும்?
அப்பயென்றால் இதற்கு என்னதான் வழி?
எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையைப் பதிவு செய்வதால் கதைத்திருட்டை எந்த அளவிற்கு தடுக்க முடியும்? எழுத்தாளர் சங்கம் தவிர வேறு யாரிடமாவது நம் கதையைப் பதிவு செய்யலாமா?
ஒரு முக்கியமான கேள்வி.
ஹாலிவுட்டில் இருப்பது போல தனியார் கன்சல்டன்சி கம்பனிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நம் கதையை ரெஜிஸ்டர் செய்து, அதற்குப் பொறுப்பேற்று, தயாரிப்பாளர்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்து வருகிறார்களா? கதை வைத்திருப்பவர்களையும், கதை தேடுபவர்களையும் இணைக்கும் சேவை. கோடம்பாக்க வாசிகள் அப்படி எந்த நிறுவனமாவது இயங்கி வருவது தெரிந்தால் இங்கு சொல்லவும்.
அந்தக் கம்பனிகளிடம் கதையைக் கொடுப்பதால் இருக்கும் சாதக பாதகங்களையும் சொல்லவும்.
இல்லை என்றாலும் பிரச்சனையில்லை. அப்படி ஒரு கம்பனி இருந்தால், புதிதாகத் தொடங்கப்பட்டால், நம்பி உங்களது கதையைக் கொடுப்பீர்களா? கம்பனியிடமிருந்து என்ன மாதிரியான கேரண்டி, சேவையை எதிர்பார்ப்பீர்கள்?
('கேர்ள்ஸ் புட்பால் டீமின் தாதா கோச்' கதை ஒரு கன்சல்டன்சியிலிருந்து லீக் ஆனது தான் என்றொரு வதந்தி உலாவுகிறது. அது உண்மைதானா?) - பிரதீப் பாண்டியன் செல்லதுரை
0 Comments