Tamil Sanjikai

கன்னியாகுமரி மாவட்டம், வெட்டுர்ணிமடம் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஆல்ட்ரின் பிரிட்டோ. படுக்கையிலும், வீல்சேரிலுமாக தான் அவரது பொழுதுகள் கழிகிறது. ஆனால் அவை வெறுமனே பொருளற்ற பொழுதுகளாக கடந்து போகவில்லை. தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மூலம் தொடர்ந்து ஒரு எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் இயங்கி வருவதோடு மட்டுமல்லாமல் பலரை எழுதவும் இயக்கி வருகிறார். மாற்றுத் திறனாளியான ஆல்ட்ரின் பிரிட்டோ கடந்த 15 ஆண்டுகளாக `அமுதம்’ என்கிற சிற்றிதழை நடத்தி வருகிறார். தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்கும் அவரை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

"1982-வாக்குல கன்னியாகுமரி மாவட்டத்துல வைரஸ்‌ காய்ச்சல் பரவி இருந்திச்சி. அப்போ எனக்கு 5 வயசு இருக்கும். எனக்கு காய்ச்சல் வந்ததுனால அப்பா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனாங்க. சாதாரண காய்ச்சல் தான். ஆனால் டாக்டர் மூளைக்காய்ச்சல்'னு புரிந்துக் கொண்டு 3 நாளாக உடம்பில் அதுக்கான மருந்துகளைச் செலுத்திட்டார். அதுக்கு பிறகு நான் கோமா நிலைக்கு போய்ட்டேன். மூளைக்காய்ச்சலே இல்லாமல் அதுக்கான மருந்துகளை உள்வாங்குனதால என் உடம்பு கொஞ்சம், கொஞ்சமா செயல் இழக்க தொடங்கிச்சி. அதுக்கு பின்னாடிதான் டாக்டர் தப்பா டிரீட்மெண்ட் பண்ணிட்டோம், வேற எங்கயாவது கொண்டு போய்டுங்க'னு சொன்னார். நரம்பு மண்டலம் முழுசா பாதிக்கப்பட்ட நிலையில ,ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாகிட்டேன். இன்னொருவர் உதவி இல்லாமல் எழுந்திருக்கவே முடியாத நிலை தான் இப்போது வரைக்கும்...

ஆரம்பத்துல எதுவும் பெருசா தெரியல. சின்ன பையனானதால அம்மாவும், அப்பாவும் எல்லா இடமும் தூக்கிட்டு போகத் தொடங்குனாங்க .நான் வளர வளர அவங்களால தூக்கிட்டு போக முடியல. அதுக்கப்புறம் வீட்டுலயே இருக்கத் தொடங்குனேன். என்னோட துணைக்கு புத்தகங்களும், தினசரி பேப்பர்களும் தான் இருந்திச்சி. என் உடல் நிலையை தெரிந்துக் கொண்ட விக்டோரியா என்கிற சிஸ்டர்தான் ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அவங்களே ஒரு டியூஷன் டீச்சர் ஒழுங்கு பண்ணி பாடம் படிக்க வைச்சாங்க. பெரிய எக்ஸாம்க்கு மட்டும் நான் போய் எழுதுவேன். அப்படி எட்டாம் வகுப்பு வரை அலோசியஸ் பள்ளிக்கூடத்துல படிச்சேன். அதுக்கு பிறகு படிக்க பல பள்ளிகளைத் தேடுனோம். என்னோட கல்வி முறைக்கு ஏத்தபடி யாரும் சேர்த்துக்க முன்வரல. அதன் பின் குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துல பத்து வரை படிச்சேன்.எனக்கு வேகமா எழுத முடியாததுனால பத்தாவது தாண்டி படிக்க முடியல.

எனக்கு பயணம் சார்ந்த நூல்கள்,பயோகிராபி ,தன்னம்பிக்கை சார்ந்த நூல்கள் வாசிக்க ரொம்ப பிடிக்கும். வீட்டுலயே இருந்து புக்ஸ்,நியூஸ் பேப்பர் படிக்கத் தொடங்குனேன் அதுனால, என்னோட பொதுஅறிவு வளர்ந்திச்சி. அதுக்கு பிறகு மியூசிக்,டிராயிங், கம்ப்யூட்டர்னு வீட்டுல வச்சி கோச்சிங் கொடுத்தாங்க. அதுஅதுக்குனு தனித்தனியா ஆசிரியர்கள் வந்தாங்க .என்னுடைய தாத்தா ஒரு சில புத்தகங்கள் எழுதிருக்காரு. எனக்கும் எழுத்துல ஆர்வம் வந்திச்சி. தினமலர்'ல வாரமலர் இதழ்'ல சுற்றுலா போய் ஒருத்தர் எழுதுவார். அந்த எழுத்து என்னை ரொம்ப ஈர்த்திச்சு . நான் முதல்ல சிறுவர் கதைகளைத் தான் எழுதத் தொடங்குனேன் . அதை நிறைய பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவங்க போடல. அதுக்கு பிறகு தான் என்னோட சித்தப்பா சேவியரின் ஒத்துழைப்பு மூலமா கடந்த 2004-ல்ல `அமுதம்’ என்ற சிற்றிதழைத் தொடங்கினேன். அதில் இலக்கியம், அறிவியலை மையமாகக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் படைப்புகள் மட்டுமே வெளியிடுறோம்.

படுத்த படுக்கையாக இருப்பவரால் எப்படி ஒரு இதழை நடத்த முடியும்? பதிலளிக்கிறார் ஆல்ட்ரின் பிரிட்டோ

எனக்கு சுற்றுச்சூழல் சார்ந்து எழுதுவது, சமூகம் சார்ந்து எழுதுவது ரொம்ப பிடிக்கும். என்னோட இதழ்'ல பல எழுத்தாளர்கள் எழுதுறாங்க .நானும் கொஞ்சம் எழுதுறேன். சாதி, மதம், அரசியல், சினிமா கட்டுரைகள் அதில் வெளியிடுவது கிடையாது. இதழை தொடங்கும் போது, படுக்கையில் இருக்கும் இவரால் எப்படி புத்தகத்தை நடத்த முடியும்? எனக் கேட்டு அதிகாரிகள் கையெழுத்துப் போடவில்லை. 13 மாதங்கள் வீல் சேரில் அலைந்து, திரிந்துதான் கையெழுத்து வாங்கினேன். நானேதான் பக்க வடிவமைப்பு, டைப்பிங் பணிகளை செய்கிறேன். படுத்துக் கொண்டே டைப் செய்து விடுவேன். அமுதம் பப்ளிகேஷன் தொடங்கி புத்தகங்கள் வெளியிட்டு வருகிறோம். இதழுக்கு கொஞ்சம் விளம்பரம் கிடைக்குது. அதன் மூலமா கிடைக்கிற பணத்தையும் வீட்டுல இருந்து கிடைக்கிற பணத்தையும் வச்சித்தான் இதழை நடத்துறேன் . இதழ் மூலமா வெளிவட்டாரத் தொடர்புகள் நிறையக் கிடைக்குது. அது தான் என்னை முடங்கி போக விடாம செயல்பட வைக்குது . முன்னாடி கொஞ்சம் நிகழ்ச்சிகளுக்கு போயிட்டுருந்தேன். 3 வருஷம் முன்னாடி என்னை தூக்கும்போது முதுகு எலும்பு பிரச்சனை வந்துடிச்சி. அதன் பிறகு போக முடியல . என்னோட இந்த முயற்சிகளுக்கு என் அப்பா ஜார்ஜ் விக்டர், அம்மா மார்க்ரெட் ஆகியோர் முழு உறுதுணையா இருக்காங்க .

அப்பா கூட்டுறவு சப் ரெஜிஸ்டரா இருந்து ஒய்வு பெற்றவர். அமுதம் இதழில் வெளிவந்த கட்டுரைகளை சேர்த்து 'அதிமேதாவி ஆனந்தன்' என்கிற தலைபில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்ச வருஷம் முன்னாடி அமுதம் டெக்குனாலஜினு தொடங்குனேன். அதுக்கப்புறம் ஆன்லைன் மார்கெட்டிங் பண்ணுனேன். அது எதுவும் கைகொடுக்கலை. நாகர்கோயில் இந்து கல்லூரி மாணவர்கள் அமுதம் இதழ் ஆசிரியரின் வாழ்வும் பணியும் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். இதுவரை 8 அமைப்புகள் மூலமாக விருதுகள் கொடுத்து ஊக்குவிச்சிருக்காங்க. முடங்கிப் போய் விடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் அமுதம் பிரிட்டோ.

கைகால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தங்களின் ஆரோக்கியம் குறித்த பிரக்ஞை இல்லாமல் வாழும் இவ்வுலகில், தன்னுடைய அங்கஹீனம் குறித்த கவலையன்றி ஒரு படைப்பாளியாய் இவ்வுலகில் தன்னைத் தற்காத்து வாழும் ஆல்ட்ரின் பிரிட்டோ மற்ற அனைத்து மனிதர்களுக்குமான ஒரு கிரியா ஊக்கியாக திகழ்ந்து வருகிறார்.

0 Comments

Write A Comment