Tamil Sanjikai

தனி மனித முயற்சி பல்லுயிர் பெருக்க பாதுகாப்பில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணருவதில்லை. பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஆடு மேய்ப்பவர் ஒருவர் தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும்போது, தன் கையிலிருக்கும் நீண்ட கழியால் மலைப் பகுதியில் குத்தி, தன் பையிலிருக்கும் மர விதைகளைப் போடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சில ஆண்டுகளில் அவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மலைச்சரிவு, மரங்களால் போர்த்தப்பட்ட பின்னர், அடுத்திருந்த மலைக்குத் தன் மந்தையுடன் புலம்பெயர்ந்துவிட்டார். காலப்போக்கில் அந்த மலை தொடரே மரங்கள் நிறைந்து காடாக மாறிவிட்டது. ஓடைகள் உயிர் பெற்றன. சிற்றுயிர்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று எல்லோருக்கும் ஆச்சரியம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மற்றொரு மலைச் சரிவில் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார் அந்த ஆடு மேய்ப்பவர். இது பிரெஞ்சு எழுத்தாளர் Jean Giono எழுதிய The Man Who Planted Trees என்ற உலகப் புகழ்பெற்ற கதை. பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஆடு மேய்ப்பவர் இருக்கிறார் என இந்தக் கதையைப் படித்தவர்கள் அவர் உண்மையாக இருப்பதாக நம்பி இருக்கிறார்கள். ஒற்றை மனிதனால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. அது நிஜத்தில் நடக்கச் சாத்தியமில்லாதது என்றுதான் அனைவரும் நம்புகிறோம். ஆனால் அதை நிஜமாக்கியவர் ஜாதவ் பயேங். இவரைப் பொறுத்தவரை காடு வளர்ப்பு, என்பது ஒரு தவம். மனிதன் ஆறறிவு படைத்தவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால், நாமே அந்த உயிரினங்களை வேட்டையாடினால், வேறு யார் அவற்றைப் பாதுகாப்பார்கள்? யாருக்கும் காட்டை உருவாக்கும் ஆர்வம் இல்லை. எனக்கு உதவ யாருமில்லை. காட்டுப் புலிகளுக்காக எனது மாடுகளை இழந்திருக்கிறேன். இந்தக் காட்டை உருவாக்கிய அனுபவம் வலிகள் நிறைந்ததுதான் என தனது வலியை வார்த்தைகளாக உதிர்த்தவர் ஜாதவ் பயேங்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஜாதவ் பயேங்கை அங்குள்ள மக்கள் ' மொலாய் ' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979-ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது ஜாதவ் பயேங்க்கு அப்போது 16 வயது. பின்னர் இது தொடர்பாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது. மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவரும் உதவி செய்யாத போது ஜாதவ் பயேங் தனி நபராக செயலில் இறங்கி இருக்கிறார்.

1980-ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்பு' திட்டத்தின்படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே ஜாதவ் பயேங் தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அதன் பின் அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த ஜாதவ் பயேங், பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார். ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மணல்திட்டில் தாவரங்களும் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் செழிக்க ஆரம்பித்தன. இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 35 வருடங்கள் ஜாதவ் பயேங் செய்தார். இப்படி 2008-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. உள்ளூர்வாசிகள் இந்தக் காட்டை மொலாய் காதூனி - அதாவது மொலாயின் காடுகள் என்று சரியாகவே அழைக்கிறார்கள். மொலாய் தான் ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர்.

2008-ஆம் ஆண்டு. ஜிட்டு கலிட்டா என்கிற வனவிலங்கு ஆர்வலர், கோகிலமுக் தீவில் பெரிய வனப்பகுதி இருப்பதாகக் கேள்விப்பட்டு, நம்பவே முடியாமல் தீவில் வந்து இறங்கினார். சில மைல்களுக்கு எதுவும் பசுமையாகத் தெரியவில்லை. பின்னர் தூரத்தில் மரங்கள் புலப்பட்டன. நடக்க நடக்க மாபெரும் வனப்பகுதி கண்கொள்ளாமல் விரிந்துகொண்டே சென்றது. விதவிதமான பறவைகள், பிற உயிரினங்கள். ஜிட்டு, அதிர்ச்சியுடன் நிற்க, சற்று தள்ளி ஒரு மனிதர் தென்பட்டார். அவர் தான் ஜாதவ் பயேங். ஜாதவின் குடிலில் அவரோடு பேசப் பேச, ஜிட்டுவால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை. தான் பல நூறு ஏக்கர் பரப்பளவில் காடு உருவாக்கிய கதையை ஜிட்டுவிடம் ஜாதவ் பயேங் சொன்னார். அந்தப் பகுதி மக்கள், ஜாதவின் செல்லப்பெயரை வைத்தே 'மொலாய் காடுகள்’ என அதை அழைப்பதையும் புரிந்துகொண்டார்.

ஊர் திரும்பிய ஜிட்டு, மொலாய் காடுகள் குறித்து கட்டுரை எழுதி, அசாமிய தினசரி பத்திரிகை ஒன்றில் கொடுத்தார். எடிட்டர் செய்தியை நம்பாமல், 'கதை எல்லாம் நாங்க போடுவது இல்லை’ என மறுத்தார். அந்தச் சமயத்தில்தான் 2008-ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் மொலாய் காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். மொலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து தகவல் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக 1,360 ஏக்கர் / 550 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு மணல்திட்டு காடாகச் செழித்து வளரத் தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார் ஜாதவ் பயேங். ஆற்றிடையே மணல்திட்டின் மீது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான். இத்தனையையும் தாண்டி மரங்கள், காடுகள், இயற்கை சூழ்ந்த இந்தப் பூமியின் மீது அக்கறையுடன் அவர் செயலாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால், அவற்றின் மீது அவர் வைத்துள்ள சுயநலமற்ற காதல்தான் காரணம்.

2012-ஆம் ஆண்டில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவுக்குப் பிறகே, ஜாதவ் பயேங்கின் பிரம்ம பிரயத்தன சாதனை உலகின் கண்களில் பட ஆரம்பித்தது. 'இந்தியாவின் காட்டு மனிதன்' என்ற பட்டம் அப்போது வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் ஜாதவ் பயேங்குக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேல் குறைந்தபட்ச அரசு அங்கீகாரம்கூட இல்லாமல், காட்டைக் காப்பாற்றிவந்த அவருக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் இது.

இந்தப் பூமியைக் காப்பாற்ற ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கான பதிலை ஜாதவ் பயேங் அற்புதமாக உருவாக்கி காட்டியிருக்கிறார்.

த.ராம்

0 Comments

Write A Comment