Tamil Sanjikai

எல்லாரையும் போல சாதாரணமாகவே நடந்து வருகிறார் விக்னேஷ்வரன். அவர் சொன்னாலோ அல்லது காண்பித்தாலோ மட்டும்தான் அவருக்கு ஒரு கால் இல்லையென்பது தெரியும். இன்றைய தேதியில் இந்தியாவின் விரல் விட்டு எண்ணும் அளவிலான பிளேட் ரன்னர்களில் ஒருவர் விக்னேஷ்வரன் என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி. அதிலும் அவர் தமிழ் இளைஞர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம் ஆகும். அவரோடு ஒரு நேர்காணல்.

நீங்கள் சந்தித்த விபத்து குறித்து கூறுங்கள் !

என் பெயர் விக்னேஷ்வரன். எலெக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தேன். 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் என் பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயித்து திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். இப்படியிருக்க நான் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாலாம் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை குடும்ப விழா ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது எதிரில் வேகமாக வந்த மீன்வண்டி ஒன்று என்மீது பலமாக மோதியதில் என்னுடைய வலதுகால் நசுங்கியது. அந்த மீன்வண்டியின் ஓட்டுனர் மதுபோதையில் இருந்தார் என்பது எனக்குத் தெரிந்தது.

சாலையில் விழுந்து கிடந்த என்னை சுற்றிலுமிருந்த ஆட்கள் ஆம்புலன்சில் ஏற்றி ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அது சாதாரணமான ஒரு மருத்துவமனை. அங்குள்ளவர்கள் எலும்பு முறிவுக்கான பிரத்தியேக சிகிச்சைகள் இங்கில்லை என்று கையை விரித்து விட்டார்கள். மீண்டும் இன்னொரு எலும்பு முறிவு மருத்துவமனைக்கு என்னை அழைத்து வந்தார்கள். அங்குள்ள டாக்டர், எலும்புகள் அத்தனையும் நொறுங்கி விட்டதாகவும், தாமதித்தால் அழுகிப் போகும் என்றதோடு காலை வெட்டினால்தான் உயிர்பிழைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர் ரோட்டெரியன் சலீமை அழைத்தேன். அவர் உடனடியாக வந்து, எப்படியாவது காலைத் தக்க வைத்துவிடலாம் என்று கூறி திருவனந்தபுரத்திலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள டாக்டர்களும் காலை வெட்டி எடுத்தால்தான் உண்டு ! என்று கூறிவிட்டார்கள். என்னைச் சுற்றி என் அம்மாவும், அப்பாவும் அழுதவாறே நின்று கொண்டிருந்தார்கள். நான் சாதாரணமாகவே இருந்தேன். வலிக்கான ஊசிகள் போடப்பட்டிருந்ததால் பெரிய அளவில் வலி தெரியவில்லை. எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. காலை எடுக்காமல் வேறு வழியில்லை. சுக்குநூறாக நொறுங்கிப் போயிருந்த அந்தக் காலில் இருந்த மண்ணை அகற்றி சுத்தம் செய்யவே ஒருநாள் முழுவதும் ஆகிவிடும் என்று புரிந்து கொண்டேன். அப்போதுதான் நான் டாக்டரிடம் சொன்னேன்.

காலை எடுத்துருங்க டாக்டர் !

இதைக்கேட்ட என் பெற்றோர் அதிர்ந்து போய் நின்றார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துவிட்டு, இப்போது காலை வெட்டினால் என்ன நடக்கும் ? ஒரு கால் இல்லாதவனை எப்படி ஒரு பெண் மணந்து கொள்வாள்? கால் இல்லாவிட்டால் எப்படி வேலை செய்வாய் ? இப்படியெல்லாம் கேள்விகள் அவர்களுக்குள் எழுந்தன.

அப்பா டாக்டரிடம் தொடர்ந்து கேட்டவாறு இருந்தார். வேண்டாம் டாக்டர் ! அவன் ஏதோ புரியாமல் சொல்கிறான் ! டாக்டர் திகைத்த படியே சொன்னார்.

என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் முதன்முதலாய் உங்கள் மகனைப் போன்ற ஒருவனைக் காண்கிறேன் ! என்றார். மேலும் இங்கு விபத்தில் படுகாயமடைந்து வருபவர்கள் எல்லாம் எப்படியாவது என்னுடைய அவயவங்களைக் காப்பாற்றி விடுங்கள் என்றுதான் சொல்வார்கள். உங்கள் மகனுடைய நெஞ்சுரம் என்னை வியக்க வைக்கிறது என்று நெகிழ்ந்து போனார்.

காலுக்கு சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தால் உடலிலுள்ள ரத்தம் மாசுபட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று சொன்னதால் அப்பாவும் அம்மாவும் இரண்டு மனமாக ஒப்புக் கொண்டார்கள்.

காலை வெட்டினார்கள்.

ஒரு காலில்லாமல் நம்மால் வாழமுடியும் என்று அந்த இக்கட்டான சூழலில்கூட எப்படி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தீர்கள் ?

அந்த முடிவை நான் எடுக்கும் போது எனக்கு வேறெந்த இரண்டாம் முடிவும் இல்லாதிருந்தது. உயிரா ? காலா ? எனும்போது எனக்கு உயிர்தான் முக்கியம் என்று தோன்றியது. சின்ன வயதிலிருந்தே எனக்கு தன்னம்பிக்கை அதிகம். எதற்கும் நான் துவண்டு போனதேயில்லை. அந்த சூழலின் இறுக்கம் ஒருவித அயர்ச்சியை எனக்குக் கொடுத்திருந்தாலும்கூட என்னால் அந்த நிகழ்வில் இருந்து மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஒரு காலில்லாதவன் இனிமேல் எலெக்ட்ரீஷியன் வேலை செய்யமுடியாது என்றும் , ஆட்டோ ஓட்டிதான் பிழைக்க முடியும் என்று என் அப்பா கவலை தோய்ந்த முகத்தோடும், குரல் முழுவதும் உடைந்து சொன்ன போது நான் என் அப்பாவைத் தேற்றினேன். ‘விடுங்கப்பா பார்த்துக்கலாம்! உடலில் கால் பாகம்தான் போயிருக்கிறது, இன்னமும் முக்கால் பாகம் நன்றாகத்தானே இருக்கிறது?’ என்றபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன.

அறுவை சிகிச்சை முடிந்த நான்காம் நாள் மருத்துவர் வந்தார். நான் அவரிடம் வீட்டிற்கு போகலாமா டாக்டர் ? என்று கேட்டேன். அவர் திகைத்தார். உன்னால் வீட்டில் சமாளித்து விடமுடியுமா ? என்று ஆச்சரியத்தோடே கேட்டார். “நான் என்னால் முடியும்” என்று சொன்னதும் அவருக்கு வியப்பு தாங்காமல் என் அப்பாவிடம் சொன்னார். சார் ! உங்கள் மகன் பிழைத்துக் கொள்வான். நீங்கள் அவனை அழைத்துச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார். வீட்டிற்கு வந்து விட்டேன்.

நிச்சயிக்கப் பட்ட திருமணம் நடந்ததா ?

இல்லை ! ஒருகால் இல்லாதவனால் நம் மகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று அந்த பெண்ணின் பெற்றோர் நினைத்திருக்கக் கூடும்! அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். பாவம் ! அவர்கள் என்ன செய்வார்கள் ? எல்லா பெற்றோரும் நினைப்பதுதானே ? அவர்கள் நினைப்பதிலும் கூட என்ன தவறு இருக்கிறது ?

எனக்கான பெண் ஒருத்தி இனிமேல் பிறக்கப் போவதில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். அதனால் என்னுடைய அந்தத் திருமணம் நின்று போனது குறித்து நான் வருந்தவில்லை. எனக்கென்று பிறந்தவள் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி என்னோடு இல்வாழ்வில் இணைந்து கொண்டு பயணிக்கிறாள். என்னுடைய மனைவியின் பெயர் ஸ்ரீதேவி. எனக்கு பெண்ணும், ஆணுமாக இரண்டு குழந்தைகள் முறையே மகள் மீராவுக்கு மூன்றரை வயதும், மகன் அஷ்வின் ராமுக்கு ஒன்றரை வயதும் நடக்கிறது. இப்போது மொபைல் சர்வீஸ் கடை வைத்திருக்கிறேன். வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஒருகாலை அல்லது கையை இழந்த மனிதர்கள் நிறைய பேர் வாழ்க்கையில் சோர்வடைந்து, இன்னொருவரின் துணை இல்லாமல் வாழமுடியாது என்று ஒரு முடிவுக்கு வந்துவிடும் சூழலில் உங்களது இழப்பை சாதனையாக மாற்றியது எப்படி ?

காலை அகற்றிய பிறகு சிலநாட்கள் பெற்றோரின் துணையோடுதான் சிற்சில வேலைகளைச் செய்தேன். அப்புறம்தான் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வது என்று முடிவு செய்தேன். மனிதர்கள் ஏதாவது ஒரு விபத்தில் அல்லது நிகழ்வில் தங்களுடைய உறுப்புக்களை இழந்தபின் வரும் ஒரு மனச்சோர்வு ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. அந்தச் சோர்வு என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் பட்சத்தில் நான் ஓய்ந்துபோவேன் என்று நான் அறிந்திருந்தேன். ஆகையால் எனக்குள் ஒரு உத்வேகம் பிறந்தது. செயற்கைக்கால் பொருத்தி நடக்க ஆரம்பித்தேன் . ஜெர்மனி தொழில்நுட்பத்தில் உருவான கார்பன் ஃபைபரால் ஆன அந்த செயற்கைக் காலின் விலை இரண்டு லட்சம் ரூபாய்கள்.

நான் நினைத்தது போல செயற்கைக்கால் பொருத்திக் கொண்டு நடப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. முட்டியைக் கிழித்துக் கொண்டு ரத்தம் கொட்டியது. அந்த செயற்கைகாலின் காரணமாக ஒவ்வாமை உருவானது. சில சமயங்களில் அதை கழற்றிப் போட்டுவிடுவேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த செயற்கைக்கால் என்னுடைய கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். யாருடைய துணையும் எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது.

மாரத்தான் போட்டிக்குள் வந்தது எப்படி ?

அதுவும் ஒரு விபத்துதான். எனக்கு சாலைவிபத்து நடந்த ஆறாவது மாதம் என்னுடைய முகநூல் நண்பர் தஸ்தகீர் என்னை அழைத்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் மாரத்தான் போட்டி குறித்துச் சொல்லி, அதில் கலந்து கொள்ள முடியுமா ? என்று கேட்டார்.

மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களின் திறமைகளை ஆராய்ந்து அது சம்பந்தமான சாதனைகளைச் செய்ய ஊக்கப்படுத்துவதுதான் சகோதரர். தஸ்தகீரின் முக்கியமான பணியாய் ஒரு சேவை நோக்கில் செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் முதலில் கேட்டதும் எனக்குள் ஒரு குழப்பம் எழுந்தது. தொடர்ந்து நடக்கும் போதே வலிக்கிறது , இதில் எப்படி ஓட முடியும் என்று எண்ணினேன். அவர் என்னிடம் முதலில் கலந்து கொள் ! பின்னர் ஓடுவது குறித்து முடிவு செய்யலாம் என்றார். நான் ஒப்புக்கொண்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன்.

சொன்ன தேதியில் ஏர்டெல் நிறுவனம் நடத்திய மாரத்தானில் கலந்து கொண்டு தொடர்ந்து ஐந்து கிலோ மீட்டர்கள் நடந்து இலக்கை அடைந்தேன். எல்லார்க்கும் ஆச்சரியம். வெகுசமீபத்தில் காலை இழந்த ஒருவன் ஐந்து கிலோமீட்டர்கள் தொடர்ச்சியாக நடந்தது கண்டு வியந்து போனார்கள். அப்போது அந்த மாரத்தானில் பங்கெடுத்த தக்சின் புனர்வாழ்வு மையத்தைச் சார்ந்த மோகனா காந்தி என்னும் சகோதரர் என்னுடைய இந்த பங்கேற்றலின் காரணமாக எனக்கு ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள செயற்கை பிளேட் கால் ஒன்றை எனக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு வழங்கினார். அதன் பிறகு தொடங்கியதுதான் இந்த வாழ்க்கையின் மாபெரும் ஓட்டமாக இருக்கிறது.

உங்கள் சாதனைகள் குறித்து ?

நான் இன்று எல்லோரையும் போல நடந்து கொண்டிருப்பதே பெரிய சாதனைதான். ஒரு கால் போன பின்பு வாழ்க்கையே தொலைந்து போனது போல நொடிந்து போகும் சாமானியர்களைப் போல நானில்லாதது குறித்த எண்ணம்தான் என்னுடைய ஆகப்பெரிய சாதனை.

நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பதினெட்டுக்கும் மேல் பரிசுகள் வென்றிருக்கிறேன். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக கொல்கத்தாவின் பாலியல் நகரமான சோனாகாச்சியிலிருந்து பங்களா தேஷின் தலைநகரமான டாக்கா வரைக்கும் சைக்கிள் பயணம் சென்றோம். நூற்றி எண்பது கிலோமீட்டர் தொடர்ந்து பயணப்பட்டோம். மேலும் நூற்றி எண்பது கிலோமீட்டர் பயணித்தால் டாக்கா சென்றுவிடலாம் என்றிருக்கும் போது இருநாடுகளின் எல்லையைக் கடப்பதில் சிக்கல் இருந்ததால் பயணம் ரத்து செய்யப் பட்டது. அதை முழுவதும் கடந்திருந்தால் ஒரு சாதனையாக இருந்திருக்கும்.

கிம்ஸ் மருத்துவமனையின் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுக்காக மாரத்தானில் பங்கேற்றேன்.

தற்போதைய என்னுடைய ஒரே கனவு, சாலை விழிப்புணர்வு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் இமயமலை வரை சைக்கிள் பயணம் போக வேண்டும் என்பதே... தற்போது அதற்கான பயிற்சியாக கடுமையான சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்து வருகிறேன். அதற்கு நாகர்கோவில் டவுன் ரோட்டரி கிளப் என்னை அவர்களுடைய பிராண்ட் அம்பாசிடராகத் தேர்வு செய்து ரூபாய் இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள சைக்கிள் ஒன்றை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு சாதனையாளராக நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல வரும் அறிவுரை என்ன ?

நான் பிறவியிலேயே அங்கஹீனத்தோடு பிறக்கவில்லை. ஒரு சாலை விபத்து என்னுடைய காலைப் பறித்துக் கொண்டது. பிறவியிலிருந்தே ஒரு உறுப்பு இல்லாமல் பழகிக் கொள்வது வேறு, பாதி வாழ்க்கையில் ஒரு முக்கியமான உறுப்பைத் தொலைப்பதென்பது வேறு. இரண்டு விஷயத்துக்கும் உள்ள வேறுபாடென்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல வருவதெல்லாம் சாலையில் கவனம் அவசியம். எனக்கு விபத்து நிகழ்ந்த அன்று என்னுடைய பைக்கில் நான் வெள்ளி நிற ஹாலோஜன் விளக்கு பொருத்தியிருந்தேன். இரவு நேரப் பயணத்தில் சாதாரண விளக்கின் ஹைபீம் வெளிச்சமே எதிரே வரும் வாகன ஒட்டியின் கண்களை ஒருவித அயர்ச்சிக்குள்ளாக்கி எரிச்சலை உண்டாக்கிவிடும் நிலையில் ஹாலோஜன் லைட்டெல்லாம் எதிரில் வரும் வாகன ஓட்டியின் கோபத்தைத் தூண்டுவதாகவே அமையும். ஒருவிதத்தில் என்னை இடித்த வாகன ஓட்டி தவறாகக் கணித்து என்னை இடித்திருக்கலாம் அல்லது வேண்டுமென்றே கோபத்தில் இடித்திருக்கலாம் என்றே எனக்குப் பலவேளைகளில் தோன்றும்.

இன்றுள்ள வாகன ஓட்டிகளுக்கு ஹைபீம் ,லோ பீம் என்ற வெளிச்ச வேறுபாடுகள் குறித்த குறைந்த பட்ச அறிவு கூட இருப்பதில்லை. முறையாக வாகனம் ஓட்டும் முறை மற்றும் சாலை விதிகள் குறித்த அறிவு இல்லாமலேயே சாலையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு தங்களது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வே இல்லாத சூழலில் தங்கள் சக வாகன ஓட்டிகள் குறித்த அறிவு எப்படி வரும் ?

ஆகவே சாலையில் எப்போதும் விழிப்புணர்வோடு, மிதமான வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதே உங்கள் ஆறாம் அறிவின் வாயிலாக உங்களது உடல் உறுப்புகளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். பதினெட்டு வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களுக்கு வாகனங்கள் வாங்கிக் கொடுத்து சாலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோரைக் கைது செய்து சிறையில் வைத்தாலே பெரும்பாலான விபத்துகள் குறையும் என்பது எனது கருத்து என்கிறார் நம்முடைய குமரி மாவட்டத்தின் முதல் பிளேட் ரன்னரான திரு விக்னேஷ்வரன். அவர் தம்முடைய வாழ்வில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து வளமோடும், நலமோடும் வாழ வாழ்த்துகிறோம்.

- பொறுப்பாசிரியர்,

- தமிழ்சஞ்சிகை

13 Comments

  1. வீரன் விக்னேஸ்வரன்..... வானமே எல்லை உனக்கு... வெற்றி வீரனாய் வையத்தில் வலம் வர வாழ்த்துகள் கண்ணா.....

  2. நெகிழ்ச்சியான கட்டுரை ... இதுபோல ஒரு தைரியம் யாருக்கும் வராது... வாழ்த்துக்கள் நண்பா !

  3. ஆகவே சாலையில் எப்போதும் விழிப்புணர்வோடு, மிதமான வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதே உங்கள் ஆறாம் அறிவின் வாயிலாக உங்களது உடல் உறுப்புகளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். // அற்புதமான வார்த்தைகள் ... பொறுப்பான பொறுப்பாசிரியர் ... நன்றிகள் ஐயா !

  4. மிகவும் அருமையான கட்டுரை... இப்படியான மனிதர்கள் உண்மையில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள் ... நன்றி !

Write A Comment