சிதிலமடையும் பழங்கால கல் மண்டபங்கள்
தினசரி நாம் கடந்து செல்லும் பாதைகளின் ஓரம் பழங்கால கல்மண்டபங்கள் காட்சி தரும். அதை கண்டும் காணாதபடி சென்றுக் கொண்டிருக்கும் போது, பெரிய நீண்ட வரலாறுகளை தன்னுள் மறைத்துக் கொண்டு காட்சி பொருளாக,சிதிலமடைந்து சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் மவுனமாக நிற்கிறது. காட்சிக் கொடுக்கிறது. கேட்பாரற்று நிற்கும் கல்மண்டபங்களை தனியார்களும் வளைத்துப் போட்டுள்ளனர். புராதான நினைவு சின்னங்களை காக்க வேண்டிய நமது அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது.
தமிழில் நமக்கு சத்திரம், சாவடி என்கிற இரண்டு சொற்கள் உண்டு. பெரும்பாலும் வழிநடை பயணிக்களுக்காக கட்டப்பட்டது தான் கல்மண்டபங்கள். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் செங்கல் கொண்டு கட்டப்பட்ட மண்டபங்களாக இவைகள் இருந்திருக்கலாம். ஓலைக் கூரை கொண்டு வேயப்பட்டு இந்த சத்திரங்கள், கல்மண்டபங்கள் கட்டியிருக்கலாம். கல்மண்டபங்கள் கட்டுகிற பரவலான வழக்கம் நாயக்கர் காலத்தில் தான் வருகி்றது. திருவிதாங்கூர் அரசர்கள், வேணாட்டரசர்களும் 350 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முக்கியமாக புனித யாத்திரைக்கு போகப்பட்ட பாதைகளில் தான் அதிகம் இருக்கிறது. உதாரணமாக மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாதைகள், திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாதை. இந்த பாதைகள் மிக முக்கியமானவைகள். அதுபோல திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வரக்கூடிய பாதை.நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு போகக் கூடியப் பாதையில் அதிகமாக சத்திரங்கள் என்று சொல்லக் கூடிய கல்மண்டபங்கள் அதிகமாக இருந்திருக்கிறது. மதுரையில் நாயக்கர்கள் இந்த கல்மண்டபங்கள் மேல் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். தஞ்சாவூர் மாராட்டிய அரசர்கள் இதில் கவனம் செலுத்திஇருக்கிறார்கள். புலவர் ராசு தொகுத்த மாராட்டிய மோடி ஆவணங்களில் தனி அத்தியாயமே இருக்கிறது. அதில் இந்த சத்திரங்கள் யாருக்காக கட்டபட்டது. இந்த சாவடிக்கள் யார் கட்டினது. சத்திரங்களில் மக்களுக்கு சமைத்துப் போட்டது யாரு என்கிற தகவல்கள் வரைக்கும் குறிப்பிடபட்டிருக்கிறது .16 -ம் நூற்றாண்டிலேயே இந்த சத்திரங்களில் சாப்பாடு போடப் பட்ட தகவல்களும் தனிப்பாடல் திரட்டிலும் அதற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது . காளமேகப் புலவர் ஒரு இடத்திற்கு போகிறார். அங்கே சாப்பாடு போடுகிறதுக்கு ரொம்ப நேரமாகிறது, அதையே அவர் ரொம்ப கிண்டலாக பாடுகிறார். இந்த சத்திரங்களில் பொங்கி சாப்பிடுவதற்காக பண்டைய காலத்தில் நிலங்களும், தோட்டங்களும் கொடுத்திருக்கிறார்கள். சத்திரங்களுக்கு வரக்கூடியவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு மண்பானைகள் கொடுத்ததுப் போன்ற தகவல்களும் கிடைத்திருக்கிறது. சில சத்திரங்களில் உழவர்களுக்கு என்று உழவுப் பொருட்களை இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அதற்கான குறிப்பு கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் இருக்கிறது. அந்த கல்வெட்டில் " இந்த சத்திரத்தில் வரக்கூடிய உழவனுக்கு மண்வெட்டி, வெட்டுக்கத்தி போன்ற பொருட்களை காலையில் கொடுத்து விட்டு சாயங்காலம் வாங்கி வைக்க வேண்டும்" என்று குறிப்பு இருக்கிறது .இப்படி வழிநடைப் பயணிகளுக்காக சாப்பாடு, உழவர்களுக்கு பொருட்கள் கொடுக்கப் பட்டது மட்டுமல்ல ,மிருகங்களுக்கு தண்ணி குடிக்க நீர் தொட்டியும் கட்டியிருக்கிறார்கள். அது பக்கத்திலயே ஒரு கிணறு தோண்டி, அதில் உள்ள தண்ணீரை எடுத்து கல் தோட்டியில் ஊற்றி இருக்கிறார்கள். அந்த தண்ணீரை, மாடுகள், ஆடுகள் குடித்துக் கொண்டுப்போகும். மாடுகளுக்கு சில சமயம் உப்புச் சத்து கூடுதலாக இருத்தால் உடம்பில் அரிப்பு எடுக்கும் போது தேக்க, மாடுகள் தண்ணீர் குடிக்கிற கல் தொட்டிக்கு பக்கத்தில் ஒரு கல்லை நட்டு வைத்திருப்பார்கள். அந்த கல்லுக்கு பெயர் " ஆவுரிக்கல்"அதுக்கு பசு தேய்க்கின்ற கல் என்று அர்த்தம். அந்த காலத்திலயே பறவைகளையும் ,விலங்குகளையும் பாதுகாக்கனும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு இருந்திருக்கிறது. மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்க வைத்திய சாலைகள் இருந்ததற்கு அசோகர் காலத்திலயும், ராஜராஜன் காலத்திலயும் கல்வெட்டு சான்றுகள் இருக்கிறது. பல இடங்களில் புராணங்களை படிப்பதற்கு தான் கல்மண்டபங்களை கட்டி இருப்பதாகவும், பல்லவர் காலத்தில் " மஹா பாரதக் கதையை" படிப்பதற்கு கல்மண்டபம் கட்டி இருப்பதாக குறிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் ராமாயணத்தை விட மஹாபாரதம் தான் செல்வாக்கு கூடுதல்.
தமிழகம் முழுவதும் இருக்கிற சத்திரங்கள், கல்மண்டபங்களை பண்படுத்தி அரசு சார்பில் சிறு ஓட்டல்களாகவோ, கடைகளாகவோ அதன் பழமை மாறாமல் கொடுக்கலாம். குமரிமாவட்டம் புத்தேரியில் ஒரு கல்மண்டபம் நூலகமாக இருக்கிறது. தற்போது சில மண்டபங்கள் விழும் தருவாயில் இருக்கிறது. இப்போது பெரும்பாலும் தனியார்கள் தான் கல்மண்டபங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கொண்டு வரலாம்.பழமையான எல்லா சின்னங்களும் அரசுக்கு தான் சொந்தம்,தனிபட்ட நபர்களுக்கு சொந்தமல்ல.சிலருக்கு பரம்பரையாக கல்வெட்டு பட்டா இருக்கும் அது தவிர்த்து மற்றபடி உள்ளவைகளை அரசு மீட்க வேண்டும்.தஞ்சாவூரில் பல பெரிய சத்திரங்களை அரசு அலுவலகங்களாக மாற்றியிருக்கிறார்கள். காட்சி பொருளான கல்மண்டபங்களுக்கு அரசு புத்துயிர் கொடுக்க வேண்டும்.
-த.ராம்
0 Comments