Tamil Sanjikai

மகன் : எப்பா ! படக்கு வெடிக்காண்டாமா ?

அப்பா : இரு மக்கழே ! பீசிமாரு நிக்கானுவளா’ன்னு பாத்துட்டு வாரென் !

மகன் : அது யாருப்பா ?

அப்பா : போலீஸ்காரனுவோ !

மகன் : படக்கு உட்டா போலீசு என்னப்பா செய்யும் ?

அப்பா : ஒன்னய ஒண்ணும் செய்யாது ! என்னயும் ஒங்க அம்மையையும் கொண்டு போயி கொல்லுவானுவோ !

கடந்த சில நாட்களாக இப்படியாகத்தான் போய்க் கொண்டிருக்கின்ற‌ன சம்பாஷணைகள். தீபாவளிக்கு வெடிக்கப்படும் வெடிகளால் ஒலி மாசு , சுற்றுப்புறச் சீர்கேடுகள் உருவாகிறதென்றால் பட்டாசு ஆலைகளை மூடிவிட வேண்டியதுதானே ? ஊரில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் போய்க் கொண்டிருக்கும் போது இந்த வெடி விஷயத்துக்காகவெல்லாம் தீர்ப்பு சொல்லிய படியே நம்முடைய நியாயமன்றங்கள் சலிப்பை விதைத்து விட்டு சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் வருங்காலத்தில் நியாய மன்றங்கள் கேலிக்குரியதாக மாறிப் போகுமோ என்னும் அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது.

நீதிமன்றங்கள் இப்படியெல்லாம் செய்யுமா ? என்றவாறுதான் இந்தக் காலச் சூழலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. 377, சபரி மலை பிரச்சினை, கள்ளக்காதல் சட்டப்படி தவறில்லை என்றெல்லாம் தீர்ப்பளித்துக் கொண்டே நீதிமன்றங்கள் தங்களுடைய மாண்பை குடிமக்களின் முன்பாகக் கடைவிரிப்பதை ஒரு சாமானிய காரியமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எல்லையில் வெடிகுண்டுச் சத்தம் கேட்டால் என்ன பதட்டம் ஏற்படுமோ அதே மாதிரியான ஒரு பதட்டத்தைத்தான் இப்போது எல்லைக்கு உள்ளே ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்போது பதட்டம் ஏற்படுவது காவல்துறைக்கு என்பதுதான் வித்தியாசமான விந்தை.

காவலர் ஒருவர் சொன்னார்.

நாங்க வெளியில சின்னப் புள்ளையளு வெடி வைக்கிறத கண்காணிச்சிக்கிட்டு திரியிறோம். எங்க வீட்டுல ரெண்டு வாணாலுவ கெடந்து சீவன வாங்கிட்டு கெடக்கு ! சொன்னாலும் கேக்க மாட்டேங்காணுவோ ! கோர்ட்டு படக்கு உடப்புடாது’னு எதுக்கு சொல்லுகு ? கோர்ட்டுக்கு வேற வேலையே கெடையாதாப்பா’ன்னு ரெண்டாவது உள்ளது ( மகள் ) கேள்வி கேட்டுட்டு திரியி ! அஞ்சி வயசுதான் ஆவுது ! இப்பவே இவ்ளோ குதர்க்கம் !

நம்ம கண்ணு முன்னாலயே வெடிய பத்த வைக்கானுவோ ! போதாத குறைக்கி நம்மளயே கூப்ட்டு, மாமா தள்ளி நில்லுங்க ! தீ தெறிச்சிராம’னு வார்னிங்க் வைக்கிதுகள் ! பேவுள்ளையள என்னத்த சொல்ல ? என்று எஸ்.எஸ்.ஐ ஒருவர் குறைபட்டுக் கொண்டிருந்தார்.

பட்டாசு விடுபவர்களைக் கண்காணிக்க தெருவுக்கு இரண்டு பேராக போலீஸ்காரர்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இருசக்கர வாகன ரோந்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். வெடிச் சத்தம் ஆங்காங்கே வெடிக்கும் போதெல்லாம் அந்தத் திசையை நோக்கி அவர்கள் பயணிப்பதைப் பார்க்கும் போது அழுவதா ? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

டமார் !

எங்கடே சத்தங் கேக்கு ? என்றவாறே இரண்டு போலீஸ்காரர்கள் வடக்கும், தெற்குமாக இன்று காலையிலிருந்தே அலைந்து கொண்டிருந்தார்கள். சாலையில் சத்தத்துக்கா பஞ்சம்? ஆயிரம் பேர் உட்கார்ந்து டிசைன் செய்த வாகனத்தின் சைலன்சரைக் கழற்றிக் கடாசிவிட்டு, டர்ர்‌ர்‌ர்‌ர்‌ர்‌ர்...... என்ற காட்டுச் சத்தத்தோடு மண்டையன்கள் சாலையில் போகும்போது ஏற்படும் சத்தத்தைவிடவா இந்த ஒருநாள் பண்டிகையில் வெடிக்கப்படும் சத்தம் ஒலி மாசை உருவாக்கிவிடப் போகிறது?

உலகத் தரம் வாய்ந்த தமிழ்நாடு அரசு பேருந்துகளின் சைலன்சர்களின் வழியாக வரும் புகையை விடவா இந்த ஒருநாள் கொளுத்தும் மத்தாப்புகளின் புகை இந்த வளிமண்டலத்தை மாசுபடுத்தி விடப் போகிறது ?

பண்டிகைகள் என்பதே மனிதர்களால் உருவாக்கப் பட்ட கூடுகை நாட்கள் அல்லது குடும்பத்தோடு உண்டு, உடுத்தி, கொண்டாடி மகிழக்கூடிய ஒரு நன்னாள். வருடத்தில் ஒருநாள் வந்து போகும் அந்த ஒரு நாளையும் கூட கொண்டாட விடாமல் சமூக ஆர்வலர்கள் என்று அழைக்கப்படும் ஆசாமிகள் இம்மாதிரியான வழக்குகளைத் தொடர்ந்து மதங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் நிலவும் நல்லிணக்கத்தில் வெடி வைத்துத் தகர்ப்பது சரியானதா ?

அப்படி உண்மையிலேயே இந்தச் சமூகத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள் என்றால், பட்டாசு ஆலைகளை மூடிவிட வழக்கு தொடரலாம். அப்போதும் கூட பட்டாசுத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பார்களே? என்ற தர்க்க ரீதியிலான கேள்விகள் எழும்.

தொழிற்சாலைகளாலும் , பன்னாட்டு நிறுவனங்களாலும் அதன் கழிவுகளாலும் சேதப்படுத்தப்பட்ட இந்தப் பூமி தினமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகிறதே ? அதனை மேலும் கொத்திக் கிளறி , புதுப்பித்தலுக்கான அதன் குறைந்த பட்ச சக்தியையும் உறிஞ்சிக் கொண்டு வருகிறார்களே? அது குறித்த கேள்விக்கு சமூக ஆர்வலர்களுக்கான பதில் என்னவாயிருக்கும் ?

சட்டம் போட்டாலும் போட்டார்கள் ! வெடி விற்பனை வழக்கத்தை விடவும் எகிறியிருக்கிறதாம். பட்டாசுக் கடைக்காரர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

நீ வெடி மச்சா ! இன்ஸ்பெக்டரு தெரிஞ்ச ஆளுதான் ! நாஞ்சொல்லிக்கிடுதேன்....

0 Comments

Write A Comment