Tamil Sanjikai

கேள்வி: உலகின் முதல் தகவல் தொடர்பு ஓவியங்கள் மூலமாகத்தான் நிகழ்ந்தது, ஓவியம் என்னும் கலையை உங்கள் எதிர்காலமாக நீங்கள் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?

சிறுவயது முதலே எனக்கு நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது, அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது ஓய்வு நேரங்களை பெரும்பாலும் நூலகங்களில்தான் செலவிடுவேன். அங்கு நான் படித்த பல புத்தகங்களில் பிரபலமான ஓவியர் மாருதியின் ஓவியங்கள்தான் இடம்பெற்றிருக்கும். அந்த ஓவியங்களில் ஒரு ஜீவன் இருக்கும். அந்த ஓவியங்களை பார்த்துப்பார்த்து ஓவியக்கலை மேல் மிகுந்த ஆர்வம் வந்தது, மேலும் ஓவியர் மாருதியின் ஓவியங்களின் பெரிய ரசிகனாகிவிட்டேன். பல்வேறு ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை ரசித்தாலும்கூட ஓவியர் மாருதியின் ஓவியங்கள் தான் ஓவியம் என்னும் கலையை நான் கற்பதற்கு தூண்டுதலாக இருந்தது. அவர் தான் எனது மானசீக குரு.

நான் ஒன்பதாவது படித்து கொண்டிருக்கும்போது என்னோடு கூட படித்த மாணவன் ஒருவன் பள்ளி கோடை விடுமுறையின்போது நாகர்கோவிலின் பிரபலமான ‘சித்ரா ஓவிய பள்ளி’யில் சேர்ந்து ஓவியம் வரைய கற்று வந்தான். அப்போது அவன் என்னிடம், நாம் இதுவரை ஓவியம் வரைய உபயோகித்த பொருட்கள் எல்லாம் அங்கிருப்பவர்களிமிருக்கும் சாதனங்களின் முண்டு ஒன்றுமே இல்லை! எவ்வளவோ வகையான வர்ணப் பொருட்கள் அங்கிருக்கின்றன ! எனக்கூறி அங்கே அவன் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை காண்பித்தான். அதைப்பார்த்த எனக்கு ஓவியத்தின் மேல் இருந்த ஆர்வம் இன்னும் ஊற்றெடுத்தது. அவன் குறிப்பிட்ட வர்ணப் பூச்சு பொருட்களை எல்லாம் கடைக்குச் சென்று வாங்கி வந்து நானும் நிறைய வரையத் தொடங்கினேன். தொடர்ந்து படங்கள் வரைய வரைய ஓவியக்கலை மீது இருந்து ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்தது.

ஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி

நான் பத்தாம் வகுப்பு முடித்த பின் ஓவியக்கலை படிக்கச் போகிறேன் என்று என் அப்பாவிடம் கூறினேன். அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை, என்னை சிவில் இன்ஜினியரிங் துறையில் படிக்க வைக்கவே அவர் விரும்பி, பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் அதற்கான விண்ணப்ப படிவத்தையும் அவர் வாங்கி கொண்டு வந்தார். பாலிடெக்னிக் கல்லூரியில் என்னை சேர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார் .அப்போதுதான் என்னுடைய ஆசிரியர் பழனியப்பனை எதேச்சையாக சந்தித்த அப்பா, நான் ஓவியம் கற்க ஆசைப்படுவதையும் ஆனால் அவர் என்னை சிவில் இன்ஜினியரிங் துறையில் சேர்க்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு எனது ஆசிரியர், அவன்தான் ஏற்கனவே நன்றாக படம் வரைவானே, அவனை ஓவியப்பள்ளியிலேயே சேர்த்துவிடுங்கள் என்றும், அவரது மகனும் ஓவியக்கலையைத்தான் பயின்று வருகிறான் என்றும், ஓவியக்கலை படித்துவிட்டு, டீச்சர்ஸ் ட்ரெயினிங் முடித்தால் அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அடுத்தநாளே அப்பா என்னை கூட்டிக் கொண்டு போய் ஓவியப் பள்ளியில் சேர்த்து விட்டார். அங்கு சென்ற பின்பு நான் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான் இன்று வரை என்னோடு கூட வருகிறது.

கேள்வி: எந்த ஒரு தருணத்திலாவது இந்த ஓவியம் வரையும் தொழிலை தவறாகத் தேர்வு செய்து விட்டோமே என்று எண்ணியது உண்டா?

அப்படி ஒரு எண்ணம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் பொருளாதாரப் பிரச்னை தொடக்கத்தில் இருந்தே இருந்தது. 1987-ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் ஓவியப்பயிற்சி முடித்த உடன் எனது அண்ணனுடன் சேர்ந்து ‘கமர்ஷியல் டிசைனிங்’ வேலைதான் செய்து வந்தேன். அப்போது கம்பியூட்டர் டிசைனிங் எல்லாம் அப்போது கிடையாது. பத்திரிக்கை விளம்பரம் முதற்கொண்டு அனைத்து விஷயங்களையும் கையால் மட்டுமே வரைந்துதான் கொடுக்க வேண்டும். எழுத்துக்கள் எல்லாம் எழுதிதான் கொடுக்க வேண்டும். அப்படித்தான் டிசைனிங் துறையில் படிப்படியாக முன்னேறினேன். சரளமாக படங்கள் வரைவதற்கு இதுதான் அடித்தளமாக இருந்தது. கூடவே வெளியிலிருந்து வரும் பெயின்டிங் வேலையையும் செய்து வந்தேன். பெரிய விளம்பர போர்டுகளை மட்டும் நண்பர்கள் வட்டாரத்தில் வரைந்து கொடுத்து வந்தேன். அப்போதெல்லாம் பணத்தட்டுப்பாடு அதிகமாக இருந்ததில்லை

ஆனால் ஓவியம் வரைவதை முழுநேர பணியாக ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்கிய போதுதான் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் நம்நாட்டில் ஓவியர்களுக்கான வருமான வாய்ப்புகள் போதிய அளவு இல்லை. ஒரே நேரத்தில் 18 ஓவியங்களை விற்பனை செய்வதற்காக வரைந்தேன். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் என்னால் ஒரு ஓவியத்தைக் கூட விற்பனை செய்ய முடியவில்லை. அவைகளைப் பாதுகாக்கவும் வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் ஓவியங்கள் எல்லாம் நாசமாகின. இதனால் ஓவியம் வரைவதில் இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. 2001ஆம் ஆண்டு வரை கம்பியூட்டரை நான் உபயோகிக்கவில்லை , அதை முயற்சிக்கவும் இல்லை , 2002 ஆண்டு கம்பியூட்டர் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

2008-ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் உள்ள என்னுடைய நண்பன் ஒருவன் சென்னையில் ஒரு விளம்பர ஏஜென்சியைத் தொடங்கினான். நானும் அவனுடன் சேர்ந்து அங்கு பணியாற்றத் தொடங்கினேன். அப்போதுதான் அங்கு வேலை செய்யும் ஒருவருக்கும் சுய படைப்பாற்றல் குறைவாக இருந்தது அல்லது சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். . கணிப்பொறியையும், குறிப்பிட்ட டிசைனிங் சம்பந்தமான மென்பொருட்களையும் மட்டும் நன்கு கற்று வைத்திருந்தனர். ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஆனால் சுயமாகச் சிந்தித்து புதிதாக ஏதாவது படைக்கும் ஆற்றல் அவர்களிடத்தில் இல்லை. இந்த ஒரு உறுத்தல்தான் நான் ஒரு ஓவியப் பள்ளியைத் துவங்குவதற்கான தூண்டுதலாக இருந்தது. படம் வரைதலின் அடிப்படைகளையும், படைப்பாற்றலை வளர்ப்பதற்கான பாடங்களையும் இனிவரும் இளம் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தேன்.

கேள்வி: இதுவரை எத்தனை மாணவ மாணவியர் உங்களிடம் படித்து விட்டு வெளியே போயிருக்கிறார்கள்?

இதுவரை யாரும் முழுமையாகக் கற்றுக்கொண்டு வெளியே போகவில்லை . இந்த ஓவியப் பள்ளியை 2016-ஆம் ஆண்டு எனது வீட்டில் வைத்துத்தான் துவங்கினேன். அப்போது 9 மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆரம்பகாலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன். ஓவியத்திறமை மட்டுமே என்னுடைய மூலதனம் என்னும் நிலையில் அந்த இக்கட்டான பொருளாதார சூழல் என்னுடைய அன்றாட வாழ்வை நகர்த்தப் போதுமாந்தாக இல்லை. ஆனாலும் என்னுடைய அந்த 9 மாணவர்களுக்கும் நல்ல முறையில் பயிற்சி கொடுத்தால் அவர்கள் மூலம் இன்னும் பல மாணவர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குள் இருந்தது . எனது முயற்சி வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரியே இன்று 40 மாணவர்கள் இருக்கிறார்கள். நானும் வாடகைக்கு ஒரு இடம் எடுத்து ஓவியப் பள்ளியை நடத்தி வருகிறேன். அதன்மூலம் எனக்குப் பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும்கூட என்னுடைய மாணவர்களின் வளர்ச்சி எனக்கு அளிக்கும் நம்பிக்கை என்னை அனுதினமும் ஊக்குவித்துக் கொண்டேயிருக்கிறது. கைநிறைய இல்லையென்றாலும் எனது செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு அவர்கள் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. நான் கற்றுக் கொண்டதை என் மாணவர்களுக்குக் கற்று கொடுக்க வேண்டும், அவர்களை மிகுந்த படைப்பாற்றல் உள்ளவர்களாக, திறமைசாலிகளாக மற்ற வேண்டும் என்பதே எனது ஆசை.

கேள்வி: இன்றைக்கு கலையுலகத்திற்கு வரும் இளைஞர்களிடையே படைப்பாற்றல் குறைவாக உள்ளதே, இன்றைய மாணவர்கள் எல்லாவற்றையும் பார்க்கவும், கேட்கவும் மட்டுமே ஆசைப்படுகிறார்கள் அதை முறையாகக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு ஆர்வமில்லையே? ஏன்?

மாணவர்களிடையே படைப்பாற்றலையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் வளர்க்கவே அரசாங்கப் பள்ளிகளில் ‘கலை’ மற்றும் ‘விளையாட்டுகள்’ ஆகிய துறைகள் சார்ந்த பாடங்களை வைத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் கலைக்கும் , விளையாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை அதற்கு கொடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். உடற்கல்வி வகுப்புகளையும், ஓவிய மற்றும் இதர கலைகள் சார்ந்த வகுப்புகளைக் கடன் வாங்கி கணக்குப் பாடமோ , அறிவியல் பாடமோ எடுக்கிறார்கள். இதை தலைமையாசிரியர்களும் , கல்வி அதிகாரிகளும் கேள்வி கேட்பதேயில்லை. அவர்களுக்கு ஆண்டிறுதித் தேர்வில் தங்கள் பள்ளியின் வெற்றியின் சதமானமே கண்முன் நிற்கிறது. அதனால்தான் நமது நாட்டில் கலைப்படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மீதான குறைபாடு நீடித்து வருகிறது. இன்று உள்ள பிள்ளைகள் படிப்பு , படிப்பு என்று உந்தித் தள்ளப்படுவதால் அவர்களுக்கு தங்கள் பாடத்தைத் தாண்டி எதையும் சிந்திக்க முடியாமல் வெறும் ஒரு மரமாகவே பள்ளி வளாகத்தில் வளர்க்கப் படுகிறார்கள்.

ஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி

ஆட்டிசம் பாதிப்பு உள்ள ஒரு மாணவன் என்னிடத்தில் ஓவியம் கற்பதற்காக வரவழைக்கப்பட்டான். வந்த புதிதில் அவனால் ஒரு வட்டம் கூட போட முடியாது. அவனது அப்பாதான் அவனது கையைப் பிடித்து வரைவார். நாட்கள் போகப்போக அவனது வரையும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது. கூடவே அவனது தன்னம்பிக்கையின் அளவும் மிகவும் வளர்ந்திருந்தது. அவன் நடந்து செல்வதைக் கூட கம்பீரமாக மாற்றியிருந்தான். கலைக்கு அத்தகைய சக்தி உண்டு.

ஒரு ஆசிரியர் என்னிடத்தில் படிக்கும் ஒரு மாணவனைப் பற்றி கூறும்போது, பொது அவன் வகுப்பில் கவனம் செலுத்துவதே கிடையாது என்றும் இப்பொழுதும் வேறெங்காவது வேடிக்கைதான் பார்த்து கொண்டிருக்கிறான் என்றும் கூறினார். நான் அவரிடம், அவன் எப்படி படிக்கிறான் என்று கேட்டேன். அதற்கு ஆசிரியர், அவன் முதல் ரேங்க் அல்லது இரண்டாவது ரேங்க் எடுக்கிறான் என்றார். அந்த மாணவன் பாடத்தில் கவனம் செலுத்தவில்லையென்றால் அவனால் எப்படி முதல் ரேங்க் , இரண்டாவது ரேங்க் எடுக்க முடிந்தது ? ஒரு கலை அல்லது ஒரு பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்த முடியும், அவன் பாடத்தைக் கவனிக்காமல் இருப்பது மாதிரி நமக்குத் தோன்றினாலும், அவன் வேறு ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தால் கூட அவனது காதுகள் மட்டும் பாடத்தைக் கேட்டு கொண்டிருக்கும். அதுதான் அந்த மாணவப் பருவத்து மூளையின் பேராற்றல்.

கேள்வி: பிரபஞ்சத்திற்கும், மனித மூளையின் ஆற்றலுக்கும், ஓவியக்கலைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதாக நான் நினைக்கிறேன், அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மனிதனின் மூளை என்பது இந்தப் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதுதான். மூளை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாகமாகத்தான் இருக்கிறது. அனைத்து மனிதர்களின் மூளையும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது என்பது ஒரு முக்கியமான ஆனால் ஆச்சர்யமான ஒரு உண்மை. ‘ டெலிபதி’ எனப்படும் கலையின் அடிப்படை இதுதான். நான் நினைத்ததை நீ கூறிவிட்டாய்! என நாம் இன்னொருவரிடம் கூறியிருப்போம் அல்லது அவர் நம்மிடம் சொல்லியிருப்பார். மிகவும் நெருக்கமான இருவரால், ஒருவர் நினைப்பதை மற்றவரால் அறிந்து கொள்ள முடியும். கலை மூலம் இத்தகைய அதீத சக்திகளைப் பெற முடியும். கலை மட்டும் அல்ல எந்த ஒரு விஷயத்திலும் நமது முழு கவனத்தை செலுத்தினால், நம்முடைய மனது ஒரு தியான நிலைக்குச் சென்று, நாம் இதுவரை அறிந்திராத பல விஷயங்களை அறிந்து கொண்டு அதில் பயனிக்கத் துவங்கும்.

நமது உள்ளுணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் .அதனால்தான் எழுத்தாளர்களால் தம்முடைய கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களைக் கற்பனை செய்ய முடிகிறது. இதன் அடிப்படையிலேயே புகைப்படக் கலைஞர்களால் தமது கலைத் திறனை திறமையாக வெளிப்படுத்த முடிகிறது. இது இந்தப் பிரபஞ்ச ஆற்றலில் உள்ள ஒரு இணைப்புதான். படைப்புத் துறையில் தீவிரமாக ஈடுபடுவர்களால் நிச்சயம் இந்த ஆற்றல் வெளிப்பாட்டை உணர முடியும்.

கேள்வி: டிசைனிங் துறையில் கணிப்பொறி தொழில் நுட்பம் மற்றும் ஃப்ளெக்ஸ் போர்டுகளின் வருகையானது கையால் வரையும் ஓவியர்களின் வேலைவாய்ப்பை எந்த வகையில் பாதித்துள்ளது? நிறைய பேர் ஓவியம் வரையும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டார்களே?

டிஜிட்டல் பெயிண்டிங்கிற்கும், கையால் வரையும் பெயிண்டிங்கிற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. கைகொண்டு வரையும் பெயிண்டிங்கின் அடுத்தகட்ட முன்னேற்றம்தான் டிஜிட்டல் பெயிண்டிங். ஆனாலும் மானுவல் பெயிண்டிங் தெரியாதவர்களால், டிஜிட்டல் பெயிண்டிங் செய்ய முடியாது. எக்காலத்திலும் கையால் வரையப்படும் ஓவியங்கள்தான் நிலைத்து நிற்பதும், விலைமதிப்பற்றதுமாகும். அதற்குதான் அதிக வரவேற்பும் உள்ளது. டிஜிட்டல் பெயிண்டிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் சைன் போர்டு வரையும் கலைஞர்கள் மட்டும்தான். போட்டோஷாப் தெரிந்த அனைவராலும் சைன் போர்டு உருவாக்க முடியும் முடியும். சைன் போர்டு வரைபவர்கள் அனைவரும் கலைஞர்கள் அல்லது படைப்பாளிகள் கிடையாது. புதிதாக எதையும் படைக்க தெரியாதவர்கள் எப்படி படைப்பாளிகள் ஆக முடியும்?. எனக்கு மானுவல் பெயிண்டிங் தெரிந்ததால்தான் என்னால் டிஜிட்டல் பெயிண்டிங் கலையை அப்டேட் செய்துகொண்டு முன்னேற முடிந்தது. அடிப்படைகளை முறையாகக் கற்று கொண்டிருந்ததால் அடுத்த கட்டத்திற்கு செல்வது எனக்கு எளிதாக இருந்தது.

கேள்வி: உலகில் உள்ள ஏனைய நாடுகளை விடவும் இந்தியாவில் ஓவியர்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளதென நான் நினைக்கிறேன், அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது உண்மைதான். ஏனென்றால் கலைக்கு இங்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சினிமாவிற்கு கொடுப்பது போன்ற முக்கியத்துவம் மற்ற கலைகளுக்கு இல்லை. சினிமாவிலேயே ஒரு இளைஞனை கிழவனாகவும், கிழவனை இளைஞனாகவும் காட்டுவது ஒரு ஒப்பனைக் கலைஞன்தான். திரைக்குப் பின்னால் இருந்து உழைப்பவனுக்கு இங்கு மரியாதை இல்லை. பல்வேறு முகம் தெரியாத கலைஞர்களின் உழைப்பினால்தான் ஒரு வெற்றிகரமான சினிமா இங்கு உருவாகிறது.

கேள்வி: உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் நம் நாட்டில் உள்ள கலைகளின் களஞ்சியமான அஜந்தா, எல்லோரா சிற்பங்களை வியந்து பாராட்டுகின்றனர். ஆனால் நம்நாட்டில் அதற்குரிய மரியாதையை நாம் கொடுப்பதிலையே ஏன்?

நம்மிடம் இருக்கும் பொக்கிஷத்தின் அருமை நமக்கு தெரிவதில்லை என்று சொல்வார்களே அது தான் இங்கேயும் நடக்கிறது. ஒரு படத்தை பார்த்து அப்படியே வரைவது ஓவியம் கிடையாது, அதை பயிற்சி (study ) என்று தான் சொல்வார்கள். இதைத்தான் ஐரோப்பிய நாடுகள் பல வருடங்களாகச் செய்து வந்தது. அவர்கள் இந்தியாவின் ஓவியக்கலையை கலையென்றே ஒத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் நமது ஓவியங்கள் தேவையானதை மட்டுமே பிரதிபலிக்கும், தேவை இல்லாத அலங்காரம் அவற்றில் இருக்காது. உண்மையான எண்ணங்களை , உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது . ஐரோப்பிய நாடுகளைப் போல ஒரு மலையையோ , அருவியையோ அல்லது ஒரு மனிதனையோ பார்த்து அப்படியே வரைவது கிடையாது. 19ஆம் நூற்றாண்டில்தான் நமது கலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது . நம்முடைய ஓவியக் கலைஞர்களும் புதுமையான பலவற்றை முயற்சிக்கத் தொடங்கினர்

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள கலைதான் உண்மையான ‘கலை’ என மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. பிக்காசோ, சால்வடார் டாலி போன்றவர்கள் தான் ஓவியக் கலையில் பல புரட்சிகளை கொண்டுவந்தனர். ‘தான் என்ன நினைக்கிறோமோ அதை வரைவதுதான் கலை’ என கலையின் வரையறையை மாற்றினார்கள். சமீபமாக சில ஆண்டுகளாகத்தான் உலக அளவில் இந்தியக் கலைக்கு அங்கீகாரம் கிடைக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் பல ஓவியக் கலைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நாட்டில் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையைத் தவிர கலைக்கான வாய்ப்புகள் வேறெங்குமே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை .

கேள்வி: ஒரு சாதாரண மனிதன் இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் ஒரு ஓவியன் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒரு சாதாரண மனிதன் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பான். ஆனால் ஒரு ஓவியன் ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்ப்பான். ஒரு கட்டிடத்தையோ , ஒரு பெண்ணையோ பார்த்த உடன் அதைப்பற்றி பல விஷயங்களை அறியும் தன்மை ஒரு ஓவியனுக்கு இயற்கையாகவே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம்! அவன் ஏன் இவளை அல்லது இந்த பொருளை கூர்மையான பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் அவன் பார்வை ஏதாவது ஒரு புள்ளியில் நிலைத்திருக்கும். அவன் கண்கள் மட்டுமே அங்கே இருக்குமேயொழிய, அவனது எண்ணங்கள் வேறு எங்காவது ஓடிக்கொண்டிருக்கும். ஏனென்றால் ஒரு மனிதன் தனக்கு விருப்பமான அல்லது தன்னைக் கவர்ந்த ஒரு சகமனிதனையோ, ஒரு பொருளையோ பார்க்கும் போது அவனுக்கு ஏதாவது ஒரு புதுமையான விஷயம் தோன்றலாம். அவனது மனம் அந்த விஷயத்தில் லயித்துப் போய் அது சார்ந்த வேறேதாவது எண்ணங்களுக்குள் மூழ்கக்கூடும். அந்த மூழ்கலானது அவனை இன்னொரு படைப்புக்கு இட்டுச் செல்வதுதான் படைப்பாற்றலின் விந்தை. ஒரு கலைஞன் ஒரு கட்டிடக்கலையை பார்த்தாலும், ஒரு வடிவமைப்பை (design) பார்த்தாலும், அவன் மனது பல விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும். என்ன செய்திருக்கிறார்கள்? எப்படி செய்திருக்கிறார்கள்? என்று தான் எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் அதற்கான விடைகளையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

கேள்வி:ஒரு ஓவியர் தான் வரைந்த ஓவியத்திற்கு விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்?. அவரது படைப்பாற்றலைப் பொறுத்தா ? அல்லது அந்த ஓவியத்திற்காக அவர் செய்த முதலீட்டை வைத்தா?

ஓவியத்திற்கு முதலீடு என்பதே கிடையாது. இதுவரை மிக அதிகமான விலையில் விற்கப்பட்ட ஓவியத்தின் விலை 420 மில்லியன். அந்த ஓவியத்தில் அதில் உபயோகித்த வர்ணங்கள் இரண்டு மட்டுமே. நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள். ஓவியத்திற்கான விலையை வர்ணங்களோ அல்லது தூரிகையோ ( Brushes ) நிர்ணயிப்பது கிடையாது, நமது மூளைதான். சில ஓவியர்கள் ஒரு கோடு போட்டுக் கொடுத்தாலே காசுதான். பிக்காஸோவோ வேறு ஏதோ பிரபலமான ஓவியரோ தெரியவில்லை, ஒரு பாவப்பட்டவனுக்கு ஒரு காகிதத்தில் ஒரு சிறிய படத்தை வரைந்து கொடுத்து இதை விற்றுக்கொள் என கொடுத்தார், அந்த ஓவியத்தை விற்ற அந்த பாவப்பட்ட மனிதனுக்கு பல லட்சம் ரூபாய்கள் கிடைத்தது. ஒரு ஓவியர் பிரபலமடைந்து விட்டாரென்றால் அவரது கையெழுத்து மட்டுமே விலை மதிக்கமுடியாமல் ஆகிவிடும். அவரது படைப்புகளை ஏலமிடுவர். அடிப்படை விலையொன்றை மட்டும் வைத்திருப்பார்கள். மற்றபடி அவர்கள் அவர்களது ஓவியத்திற்கு விலையை நிர்ணயம் செய்வது கிடையாது.

கேள்வி: புதிதாக ஓவியத்துறைக்கு வரும் மாணவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புறீர்கள்?

அடிப்படையை ஒழுங்காகக் கற்று கொண்டாலே போதுமானது. ஓவியக்கலை ஓவியர்களுக்கானது மட்டும் கிடையாது. ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்றால் கூட மனித உடற்கூறுகளை ( Human Anatomy) ஒழுங்காக வரையத் தெரிய வேண்டும், தெரியவில்லையென்றால் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக முடியாது. கட்டிடக் கலையாக இருந்தாலும் சரி! மெக்கானிக்கல் தொழிலாக இருந்தாலும் வேலை மட்டும் செய்ய போகிறோம் என்றால் அடிப்படை ஓவியக்கலை வேண்டும் என்பதில்லை. ஆனால் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அடிப்படை ஓவியக்கலை மிகவும் அவசியம். கைதேர்ந்த ஓவியர் ஒருவர் வரைவதை பார்த்து நாமும் எந்த அடிப்படையையும் தெரியாமல் அதுபோல் முயற்சித்தால் கண்டிப்பாக நம்மால் முடியாது. ஒரு சிலருக்குதான் இயற்கையாகவே ஓவியம் வரும். அவர்களைத்தான் நாம் self taught ஆர்ட்டிஸ்ட் என கூறுவோம் .அவர்கள் எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அடிப்படைகளை முறையாகக் கற்றுக்கொள்வது நல்லது .

கேள்வி: எல்லா மொழிகளிலும் உங்களுக்கு பிடித்த எழுத்து வடிவம் எது?

அப்படி எதுவும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லா எழுத்துக்களும் நம் தமிழ் மொழியில் இருந்து வந்தவைகள்தான். 1914ல் ஒரு பொறியாளர் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எப்படி வந்தது என ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் அப்போதே கணினி கண்டுபிடிப்பதற்கு முன்னரே கடவுளுடைய சூத்திரம் 0,1 என்ற இரண்டு எண்கள்தான் என்று கூறி இருந்தார் .

தமிழ் மொழியில் தான் அதிக எழுத்துக்கள் உள்ளன , நமது எழுத்துக்கள் அனைத்தும் நேர்கோடுகளும் வளைவுகளும் சேர்ந்துதான் இருக்கும், இவை பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புடையவை. எனவேதான் நானும் தமிழ் எழுத்துக்கள் குறித்தான எனது ஆராய்ச்சியைத் துவங்கியிருக்கிறேன். கலை மட்டும் அல்ல! மருத்துவமும் , அறிவியலும் நம் தமிழர்களிடமிருந்துதான் வெளியே போயிருக்கிறது. பழங்கால ஓலைச் சுவடிகளை எல்லாம் படித்தால் தெரிந்திருக்கும். ஆனால் தெரியக்கூடாது என்பதற்காகவே அவற்றை எல்லாம் ரகசியமாக அழித்தொழித்து விட்டனர். வாஸ்கோடகாமா இந்தியா வருவதற்கு முன்னரே நாம் அங்கு போய் வணிகம் செய்து கொண்டு இங்கு வாழ்ந்து கொண்டிருந்தோம், அப்படி இருக்கும்போது வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்தார் என்பது எப்படி உண்மையாகும்? நம் தமிழர்களின் பெருமை கண்டிப்பாக வாஸ்கோடகாமாவிற்குத் தெரிந்திருக்கும். தமிழர்களாகிய நமக்குத்தான் தெரியவில்லை...

0 Comments

Write A Comment