Tamil Sanjikai

தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க, கலாச்சாரத்தை பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்பு இன்றி வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறைக்கு வடகிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் ,திருவனந்தபுரத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் ,மார்தாண்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் 'சிதறால் ’என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில் ’ இருப்பது மிகப் பெரிய குடைவரை (மலை) கோயிலாகும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மலை உச்சியில் சிறிய புள்ளி போன்று அழகாக தெரியும். சுற்றிலும் ஓங்கியப் பாறைக்கூட்டங்கள். மலையில் இருந்துப் பார்க்கும் திசை எங்கும் பூமி பச்சை போர்வை விரித்து கிடப்பது போல் தெரியும். 7-ம் நூற்றாண்டு வரை முனிவர்கள் சிதறால் கல் குகைகளை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்களாம் . மலை அடிவாரத்தில் இருந்து படிகள் வழியே அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் குகைக் கோயில் வந்துவிடுகிறது.

சிற்பக்கலையின் உச்சம் சிதறால் மலைக்கோவில்!

கி.பி. 8 -ம் நூற்றாண்டில் சைவ, வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் .வைணவமும் இணைந்து சமண,புத்த மதங்களைப் பாரத நிலப்பரப்பில் தென் பகுதியில் வீழ்ச்சியடைய வைத்தது .

அப்போது, ‘சிதறால்’ ‘திருச்சாணத்து மலையில்’ இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். இங்கு சமண பள்ளி ஒன்று இருந்ததாகவும்,அதிலே பலநூறு மாணவர்கள் படித்ததாகவும் அவர்களுக்கு "குறத்தியறையார்" என்ற மகாராணி நிபந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய தமிழ்-பிராமி மொழி கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

சிற்பக்கலையின் உச்சம் சிதறால் மலைக்கோவில்!

சமண சமயத்தின் வீழ்ச்சிக்குபின் பல நூற்றாண்டுக்கள் அழிந்து கிடந்த இக்கோயிலை இரண்டாம் ராஜராஜன் காலத்தில் 13- ம் நூற்றாண்டில் இக்கோயிலில் இருந்த ‘பத்மாவதி’ சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்து கோயிலாக எடுத்துக் கட்டியிருக்கிறார்கள். இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள ‘நாகர் அம்மன்’ கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில் சிதறால் குகையில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறை அமைப்பில் இயற்கையாக அமைந்த குகைத் தளத்தில் பகவதிக் கோயில் அமைந்துள்ளது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியர் சிற்பங்கள் இப்பகுதி முக்கிய சமணத்தலமாக இருந்ததாக கருத முடிகிறது. இச்சிற்பத் தொகுதிகளில் ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி இயக்கியின் உருவங்கள் கருணை பொழியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன. மற்ற சிறு உருவங்கள் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்து முக்குடைகள் தலைக்கு மேல் விளங்கும் வகையில் இருக்கின்றன. மகாவீரர் உருவம் முக்குடைகள் அலங்கரிக்க, சைத்யமரத்துடன் இரண்டு உதவியர் சூழக் காணப்படுகிறது. அம்பிகா இயக்கி உருவம் இரண்டு குழந்தைகளுடன் யானை முத்திரை அருகில் இருக்க, திரிபங்க வளைவுகளுடன் மிக எழிலாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியச் சிற்பங்களும் பறக்கும் வித்யாதாரர் மற்றும் அடியவர் உருவங்களுடன் காணப்படுகின்றது. ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செய்தளித்தவர்களின் பெயர், ஊர் பற்றிய விபரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.சிதறால் மலையில் உள்ள குளம் இதயம் வடிவம் போல் இருப்பது இன்னும் கூடும் அழகைக் கொடுக்கிறது.

சிற்பக்கலையின் உச்சம் சிதறால் மலைக்கோவில்!

பகவதிக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பிற்காலத்தில் கோயிலின் முன் மண்டபம், கூடம், பலிபீடம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் தீர்த்தங்கரர் சிற்பமும் வலப்பக்கம் தேவி, இடப்பக்கம் பார்சுவநாதர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் விமானம் ஒன்றும் இக்கோயிலில் இருந்ததுள்ளது. தெற்குப்பகுதியில் உள்ள கல்வெட்டு தமிழ்மொழியில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. விக்கிரமாதித்திய வரகுணனின் 28-வது ஆட்சியாண்டினை இக்கல்வெட்டு குறிக்கிறது. "பேராயிற்குடி அரிட்டநேமி பட்டாரகரின் சீடர் குணந்தாங்கி சூரத்திகள் இப்பகவதி கோயிலுக்குச் சில பொன் அணிகலன்களைக் கொடுத்ததை" இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. மண்டபத்தில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1300 -ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு பகவதி கோயிலின் செலவுகளுக்காக கீழ் வேம்பநாட்டு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் தமிழ்ப் பல்லவரையன் வழங்கிய கொடையையும் தெரிவிக்கிறது.

முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு, ஒரு முறை சீனாவுக்கு சென்ற போது, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான சூயென் லாய், நேருவிடம் சிதறால் மலைக்கோயில் பற்றி விசாரித்துள்ளார். அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால். நேருவின் வேண்டுகோளின்படி இன்றும் இக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது.

சிற்பக்கலையின் உச்சம் சிதறால் மலைக்கோவில்!

சமீபத்தில் அரசு சிதறாலை சுற்றுலாத்தலமாக மாற்றி சில வேலைகளைச் செய்தது. அப்போது கொத்தனார்கள் பல பழமை வாய்ந்த சிலைகளை உடைத்துவிட்டு போனார்கள் என்கிற குற்றசாட்டும் உண்டு.

சிற்பக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடமாக இது விளங்குகிறது. சிதறால் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் அரசு சார்பாக சுற்றுலா விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. 2009- ம் ஆண்டு ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட மலைக்கோயில் சுற்றுலா விழா, 2010 -ம் ஆண்டு முதல் 3-நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. தற்போது சுற்றுலா விழா சில ஆண்டுகளாக நடை பெறாமல் இருப்பது சுற்றுப் பயணிகளை வருத்தம் அடைய செய்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு செய்துக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளும் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

அதனால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. சிதலமடையாமல் சிதறால் மலைக் கோயிலை பாதுக்காக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் சுற்றுலா பயணிகளிடமும் ,பொதுமக்களிடமும் எழுந்து வருகிறது.

0 Comments

Write A Comment