Tamil Sanjikai

எப்படியோ ஒரு திருடன் ஜன்னல் வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிறான். அவன் நுழைந்தது வீட்டினருக்குத் தெரிவதில்லை. சிலநாட்களில் அந்தத் திருடன் பலதிருடர்களாகப் பல்கிப் பெருகுகிறான். வீட்டினர் விழித்துக்கொள்கிறார்கள். அவனை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறார்கள். கதவு ஜன்னல் எல்லாம் சாத்தப்பட்ட வீடு என்பதால் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் அவ்வப்பொழுது திருடர்கள் இருக்கிறார்களா எனக் காவலர்கள் ஜன்னலைத் திறந்து பார்க்கிறார்கள். போராட்டம் தீவிரமடையாததால் அவர்கள் கண்களுக்குத் திருடர்கள் இருப்பது புலப்படுவதில்லை. நாட்பட நாட்படப் போராட்டம் அதிகரிக்கிறது. ஒருநாள் ஜன்னலைத் திறந்து பார்த்தால் தெரிந்துவிடும் அளவுக்குத் தீவிரமடைகிறது. ஆனாலும் காவலர்கள் திறந்து பார்ப்பதில்லை. அதற்காக அந்த வீட்டில் திருடர்கள் இல்லை என்று ஆகிவிடுமா என்ன? அந்த வீட்டிலிருந்து அடுத்தவீட்டிற்கும் திருடர்கள் பரவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் யாரும் ஜன்னலைத் திறந்து பாராததால் அந்தவீட்டில் திருடர்கள் இருப்பதே யாருக்கும் தெரிவதில்லை. ஒருநாள் யதேச்சையாக ஒரு காவலர் ஜன்னலைத் திறக்கும் போது போரின் உக்கிரம் திருடர்களின் இருப்பைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

இதை அப்படியே ஹெச்ஐவி எனப்படும் ஹ்யூமன் இம்யுனோ டெபீஷியன்ஸி வைரஸ் ( HIV) தொற்றுக்கும் பொருத்திப் பார்க்கலாம். வைரஸ் உள்ளே வந்தது வந்தவருக்குத் தெரியாது. வைரஸின் வருகையை அறிந்து அவரது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு நான்கைந்து நாட்களில் ஏண்டிபாடிக்களை உற்பத்தி செய்தாலும் அவை டெஸ்ட்டுகளின் மூலம் அறியப்படும் அளவை அடையச் சிறிது காலம் பிடிக்கும். அந்தக் கால அளவு ஆளாளுக்கு மாறுபடும். சராசரியாகக் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள். அதிகப்படியாக மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்.

தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து பரிசோதனைகளின் மூலம் அறியப்படும் அளவை ஏண்ட்டிபாடிகள் எட்டும் கால அளவையே window period என்கிறோம். இது மூன்று வாரத்திலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆளுக்காள் மாறுபடும். இந்த விண்டோ பீரியடில் ஹெச்ஐவி ஏண்ட்டிபாடி பரிசோதனை செய்தால் பரிசோதனை முடிவுகள் 'நான் ரியாக்டிவ்' ஆகவே வரும். அதாவது தொற்று இல்லை என்றே காட்டும். ஆனால் உடலில் வைரஸ்கள் இருக்கும். அவர் மூலமாக அடுத்தவருக்குத் தொற்று ஏற்படும்.

அந்த மனிதருக்கு எப்படியோ ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் விண்டோ பீரியடில் இருக்கும் பொழுது இரத்ததானம் செய்திருக்கிறார். அந்த இரத்தத்தை ஏண்ட்டிபாடி கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது தொற்று இல்லை எனவே வந்திருக்கும். அந்த இரத்தத்தை அந்த கர்ப்பிணிக்கு வழங்கியிருக்கிறார்கள். இதனிடையே அந்தக் குருதிக் கொடையாளர் வெளிநாடு செல்வதற்காகப் பரிசோதித்துப் பார்த்த பொழுது தனக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதை அறியவருகிறார். அதாவது விண்டோ பீரியடைக் கடந்திருந்ததால் பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவருகிறது. அவரிடம் விசாரித்த பொழுது தான் கொடுத்த குருதிக்கொடைபற்றித் தெரிவிக்கிறார். பரபரப்பான மருத்துவத்துறை அந்தக்குருதி ஒரு கர்பிணிக்கு வழங்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறது. அதிர்ந்து போய்ப் பரிசோதித்ததில் அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது உறுதியாகிறது. குருதிக் கொடையாளி மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்.

இதில் மனிதத் தவறு எங்கிருக்கிறது? பொதுவாகவே கொடையாகப் பெறப்படும் குருதி ஹெச்ஐவி ஹிபாடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் மற்றும் சிபிலிஸ் ஆகிய நான்கின் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்பட்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே கொடையளிக்கப்படும். ஏதேனும் ஒரு தொற்று இருந்தாலும் அந்தக் குருதி டிஸ்கார்ட் செய்யப்பட்டுவிடும். துரதிருஷ்டவசமாக இப்படி விண்டோபீரியட் குருதிக்கொடையால் நோய் தொற்றுவது அரிதினும் அரிதானது. நடக்கவே கூடாது ஒன்று தற்பொழுது நடந்திருக்கிறது.

சரி விண்டோ பீரியடில் இருக்கும் ஹெச்ஐவி தொற்றை எப்படி அறிவது? அறிந்தால் இப்படிப்பட்ட கொடியவிளைவுகளில் இருந்து தப்பிக்கலாமே. வழி இருக்கிறது. தற்போது கடைபிடிக்கப்படும் ஏண்ட்டிபாடிகளைக் கொண்டு வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனையால் தான் விண்டோபீரியடைக் கண்டுபிடிக்கமுடிவதில்லை. ஏனென்றால் இந்த முறையிலான பரிசோதனை நேரடியாக வைரஸின் இருப்பை அறிவதில்லை. அவற்றிற்கெதிராக மனித உடல் உற்பத்தி செய்யும் ஏண்டிபாடிக்களை அறிவதன் மூலம் மறைமுகமாக வைரஸின் இருப்பை அறிகிறது. மாற்றாக, நேரடியாக வைரஸின் இருப்பை அதன் ஏண்டிஜன் அதாவது வைரஸின் பாகங்களின் இருப்பை அறிவதின் மூலம் உறுதிசெய்யமுடியுமா என்றால் முடியும். தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திலேயே அறியமுடியும். ஆனால் ஒருவருக்கு எப்போது தொற்று ஏற்பட்டது என்று அறிந்தால் தான் அதைச் செய்யலாம். ஏனென்றால் இந்த வகைப் பரிசோதனைகள் அதிகமான பணம் தேவைப்படுபவை. தினப்படி பரிசோதனைகளுக்கு அவ்வளவு பணத்தைச் செலவழிக்க யாரும் விரும்புவதில்லை. ஒருவேளை ஏண்டிஜெனை அறியும் இந்த வகைப் பரிசோதனைகள் நடைமுறையில் இருந்திருந்தால் அந்தக் கர்ப்பிணிக்கு இப்படியொரு மோசமான நிலை வந்திருக்காது.

சரி இவ்வகைப் பரிசோதனை நடைமுறைக்கு வரும் வரை நம்மால் எதுவும் செய்ய இயலாதா? வழியுண்டு. ஹெச்ஐவி தொற்றுவதற்கான வாய்ப்புள்ள செயல்களில் (high risk behaviour) ஈடுபடுபவர்கள் குருதிக்கொடை அளிக்காமல் இருக்கலாம். பச்சைகுத்திக் கொள்பவர்கள் நான்கு மாதங்களுக்குக் குருதிக்கொடை அளிக்கக்கூடாது என்கிறது அமெரிக்கச் சட்டம். நாம் இந்த விஷயத்தில் போகவேண்டிய தூரம் அதிகம்.

உடனடியாகச் செய்யவேண்டிய ஒரு அவசர அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் உடலில் ஹெச்ஐவி போன்ற தொற்றுக்கள் உள்ளனவா என அறிய அவரது குருதி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ஏண்ட்டிபாடியை அறியும் முறை தான். தொற்றில்லை என வரும் பரிசோதனை முடிவை நம்பியே மருத்துவர்களும் செவிலியர்களும் ஆய்வக நுட்பனர்களும் மருத்துவப் பணியாளர்களும் சேவையளிக்கிறார்கள். ஒருவேளை அந்த நோயாளி விண்டோ பீரியடில் இருந்தால் மேற்கண்டோரின் நிலை என்ன?

ஹெச்ஐவி ஹெச்பிவி ஹெச்சிவி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் மருத்துவச் சேவையை வழங்குவோரையும் எண்ணிப்பாருங்கள்.

மனதறிந்து யாரும் தொற்றுள்ள குருதியை வழங்கப்போவதில்லை. மருத்துவப் பணியாளர்களும் பொதுச் சமூகத்தின் அங்கம் தான்.

எது எப்படியிருப்பினும் தற்போது அந்த கர்பிணிக்கு நடந்திருப்பது நடந்திருக்கவே கூடாத மாபெரும் துன்பியல் சம்பவம். இதை வைத்து மருத்துவத் துறையே மோசம் எனும் முடிவுக்கு வரும் பொதுச் சமூகம் தனது முடிவைப் பரிசீலித்துப் பார்க்கலாம் என்பதே வேண்டுகோள்.

-சத்தியப்பெருமாள் பாலுசாமி

0 Comments

Write A Comment