Tamil Sanjikai

தமிழ் இலக்கியத்துக்கு தமிழகத்தைத் தாண்டி வெளியில் இருந்து பல முக்கியமானப் படைப்புகளை கொடுத்தவர்கள் ஆ.மாதவன், நகுலன், நீல.பத்பநாபன் போன்ற பலர். இவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்துக் கொண்டு தமிழகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். எழுத்தாளர் ஆ.மாதவன், கேரளாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். பின்னர், செல்வி ஸ்டோர் என்று சொந்தமாக கடை நடத்தி வந்தார். இவரது சிறுகதைகள் முழு நூலாகவும் வெளிவந்துள்ளது, கிருஷ்ண பருந்து, புனலும் மணலும் உட்பட 3 நாவல்களையும் படைத்துள்ளார்.

திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவை பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் நவீன சிறுகதை இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தின் வணிக வீதியான சாலைத்தெருவில் அன்றாடம் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை தனக்கேயுரிய நடை மற்றும் வடிவத்தில் எழுதினார். 85 வயதை தாண்டி இப்போது வாசிப்பில் மட்டும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டிருக்கும் சாகித்ய அகாடமி விருது, விஷ்ணுபுரம் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவனை திருவனந்தபுரத்தில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

உங்கள் முதல் எழுத்துப் பயணம் எப்படி தொடங்கியது?

தொடக்கத்தில் மலையாளத்தில் மேல்நாட்டுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன். 1952 -வாக்கில் தூக்குமேடை தொடரை மொழிபெயர்த்தேன். அதன்பின் தான் எழுதத் தொடங்கினேன். அந்த நாட்களில் காதல் மாத இழில் வெளி வந்த என் எழுத்துகள் பலரால் வாசிக்கப்பட்டது, பேசப்பட்டது.

திருவனந்தபுரம், குமரி, நெல்லை இந்த மூன்று மாவட்டத்தில் உங்களை சொந்தம் கொண்டாடுகிறார்களே?

என் தந்தை நெல்லை செங்கோட்டையைச் சேர்ந்தவர். நான் பிறந்தது திருவனந்தபுரம். படித்தது மலையாளம். என் மனைவிக்கு கன்னியாகுமரிமாவட்டம் கொட்டாரம். குமரிக்கும் கேரளாவுக்கும் 70 கிலோ இடைவெளி தான். எல்லாம் ஒன்று தான்.

உங்கள் எழுத்துக்கு திருவனந்தபுரம் எப்படி உதவியது?

நான் சாலைக்கடை வட்டாரப் பகுதியைச் சேர்ந்தவன், அதுதான் கடைத்தெரு. பத்பநாப சுவாமி கோயில் அதன் மேற்கு பகுதியில் இருக்கிறது. அங்கே நிறைய குமரிமாவட்ட மக்கள் இருக்கிறார்கள். அந்த வணிக வீதி ,கரமனை ஆறு வரை இருந்தது. அதுவும் ,அதன் சூழலும் தான் நான் எழுதக் காரணம்.

கேரள- தமிழன் என்கிற உங்களின் உறவு எப்படி இரண்டறக் கலந்து போனது?.

ஆ.மாதவன், மலையாளத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். அதன் அங்கிகாரமும் கிடைத்து விட்டது. தமிழ் என்னை புறங்கணிக்க வில்லை. சாகித்ய அகாடமி கொடுத்திருக்கிறது. ஆரம்பக் காலம் முதல் தமிழ் நாட்டில் என் கதைகளைப் படித்து விமர்சனம் செய்தார்கள். அதில் கேரள வாசகர்களும் அடங்கும்.

மலையாள இலக்கியங்களில் உங்களின் பங்களிப்பை எப்படி பார்க்கிறார்கள்.?

நான் கேரளாவில் பிறந்ததால் மலையாள இலக்கிய ஈடுபாடு உண்டு. பல மலையாள கவிஞர்கள் நண்பர்கள். தகளி என்னிடம் தோட்டியின் மகன், அம்மணி ஆகிய நூல்களை மொழிபெயர்க்கச் சொன்னார். எனக்கு எம்.டி.வாசுதேவநாயரை பிடிக்கும். இலக்கிய மாணவர்கள் என்னை அழைத்து கலந்து பேசுவார்கள். என்.ஏ.கிருஷ்ணவாரியர் என்கிற பெரிய விமர்சகர் இருந்தார், அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு.

தமிழ் அரசியல் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது?

தமிழக அரசியலைப் பேச தயக்கம் தான். நான் கேரள அரசியலைப் படிப்பேன். ஆனால் தமிழக அரசியலை புறக்கணிக்க வில்லை.எனக்கு ஆரம்பக் கால திராவிட இயக்க கொள்கைகள் பிடிக்கும். அதன் இதழ்களில் எழுதி இருக்கிறேன். தமிழக அரசியல் சாதிகளோடு ஒன்றிப்போய் விட்டது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகுகிறது.

கேரளாவில் திராவிடக் கொள்கை இல்லை ஏன்?

இன்று தான் இல்லை, ஆனால் முன்பு இருந்தது. அப்போது திராவிடக் கொள்கை என்றுத் தெரியாது. பெரியார் கொள்கைகள் என்று தான் தெரியும். இன்று திராவிட இயக்கத்தின் மாற்றத்தால் அது காணாமல் போய்விட்டது.

பெரியார் வைக்கம் போராட்டம் பற்றி மாற்று கருத்து நிலவுகிறது ஏன்?

முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. பெரியார் வந்துப் போராடிய பிறகு அனுமதி கிடைத்தது. அந்த அனுமதியை பெற்று தந்ததவர்களில் பெரியாரும் ஒருவர். அவரை புறக்கணிக்கவே முடியாது, அவர் பெரும் புரட்சியாளர். கேரள மக்களுக்காகவும் புரட்சி செய்தவர்.

உங்கள் நண்பர் ஜெயமோகன் மீது பலர் வைக்கும் விமர்சனத்தை எப்படி பார்க்குறீர்கள்.?

எழுத்தாளர்கள், விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர்கள் அல்ல. விமர்சனம் செய்வதால் தன் ஆத்மாவை தொட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். புத்தகத்தை எழுதி விட்டால் அது பொது தளத்துக்கு வந்து விடும். அதனால் ஜெயமோகன் விமர்சனம் வைக்கிறார். பலரும் அவர் மீதும் விமர்சனங்களை வைக்கிறார்கள். காய்த்த மரத்தில் தான் கல்லடிபடும் அதுபோல ஜெயமோகன் காய்த்த மரம். தமிழின் சிறந்த எழுத்தளர்களில் ஒருவர் ஜெயமோகன்.

உங்கள் சமீப வாசிப்பு எப்படி போகிறது?.

நண்பர் நாஞ்சில் நாடன் கட்டுரைகள் மீது அதீத ஆர்வம் உண்டு. புதுமை பித்தனுக்கு பின் நாஞ்சில் நாடன் தான். அவர், கம்பனை கரைத்து குடித்தவர். மொழியைப் பிசிறில்லாமல் எழுதுவதில் நாஞ்சிலுக்கு நிகர் அவர் தான். அவர் படைப்புகளோடும், புதிய புதிய புத்தகங்களோடும் போகிறது.

வட்டார வழக்கில் இருந்து எழுதுவது தமிழுக்கு அழகா?

தமிழ் எப்போதும் அழகு தான். வட்டார வழக்கு, சொல் செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுவது. பரந்துப்பட்ட தமிழை யாரும் சிதைத்து விட முடியாது. கல்வெட்டுதான் மொழியின் ஆதாரம். மொழிக்கு பொது மேன்மை, கலாச்சாரம் அடிப்படை. அது தமிழுக்கு இருக்கிறது.

-த.ராம்

0 Comments

Write A Comment