Tamil Sanjikai

தமிழென்பது இது பாரதியின் தமிழுமல்ல, பாரதிதாசனின் தமிழுமல்ல...
-பொன்னீலன்

"புதிய தரிசனங்கள்" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் நாவலாசிரியர் பொன்னீலன், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், மணிக்கட்டி பொட்டலில் இயற்கை சூழ வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அவரது புதிய தரிசனம்,மறுபக்கம் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளி வந்தது. தற்போது "பிச்சிப்பூ" நாவலை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவரைச் சந்திக்க சென்றிருந்தோம். முகம் முழுக்க சந்தோஷத்தில் இருந்தவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

தற்போது வட்டார வழக்கில் பல நாவல்கள் வந்து வெற்றி பெறுகின்றன.இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழென்பது பாரதியின் தமிழுமல்ல, பாரதிதாசனின் தமிழுமல்ல.புதுமை பித்தன் தன் வட்டாரத்தில் இருந்து கொண்டு வந்தது போல. இன்னைக்கு ஒவ்வொருவரும் தன் வட்டாரத்தில் இருந்து எடுத்து கொட்டுகிறார்கள். எந்த படைப்பானாலும் சரி,உலகத்தில் உள்ள எல்லா படைப்பும் படைப்பாளியின் காலடியில் இருந்து தான் முளைத்து வர முடியும்.அப்படி முளைத்து வந்தால் தான் அதில் உயிர் இருக்கும்.வட்டார வழக்கு என்று சொல்லும் போது வட்டாரம் சாராத,வட்டார மண் சாராத,வட்டார சாரம் சாராத.வட்டார மொழி சாராத,எதுவும் உயிருள்ளதாக இருக்காது.அப்படி வரும் போது அந்த வட்டார நாவல்களின் மிக சிறப்பான அம்சம் வட்டாரத்திற்குரிய மொழிதான். இதை இப்போதுள்ள படைப்பாளிகள் அழகாகச் செய்கிறார்கள். வட்டார மொழியைக் கொட்டும்போதுதான் மொழி அழகாக விரிகிறது,விசாலப் படுகிறது. இதுவரை கேட்டறியாத வார்த்தைகள்,சொல்லடுக்குகள்,பழமொழிகள் வருகிறது.எல்லாம் நம் மொழிக்குள் இருந்து வருபவை தானே?இன்று வட்டார நாவல்கள் தமிழுக்குள் குவிகின்றன.

சாகித்ய அகாடமி விருது, அந்த விருதுக்குத் தகுதியான இறந்துபோன படைப்பாளர்களுக்கும் ,இப்போது உயிரோடு இருக்கும் படைப்பாளிகளுக்கும் இன்னும் போய் சேரவில்லை என்கிற ஆதங்கம் ,தமிழ்நாட்டில் பெருமளவில் இருக்கிறதே?

தமிழ்நாட்டில் நவீனத்துவம்,பின் நவீனத்துவம்,பெண்ணியம்,சாதியம் என பலபோக்குகள் இருக்கிறது.சாதிகளுக்குள்ளே இந்த சாதிக்கு கிடைக்க வேண்டும் என்கிற போக்கும் இருக்கிறது. தன்னுடைய பார்வைக்கு கிடைக்கவில்லை ,தனக்கு கிடைக்கவில்லை ,தன்னுடைய சாதிக்கு கிடைக்கவில்லை என்பவையெல்லாம் குறையாகக் காட்டப்படுகிறது. சாகித்ய அகாடமி விருது சில சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக இருக்கிறது. புத்தகமானது மூன்று வருஷங்களுக்குள் வந்ததாக இருக்க வேண்டும், என்னும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது . அந்த பட்டியலில் இருந்து பத்து நாவல்கள் இரண்டாவது ,மூன்றாவது ,நாலாவது தேர்வாக வந்து சேர்கிறது. இதனை சாகித்ய அகாடமி தேர்வு குழு தேர்ந்தெடுக்கிறது. இந்த குழு மூன்று பேர் அடங்கிய இலக்கிய குழுவாகும். சாகித்ய அகாடமி சார்ந்த அதிகாரி சட்ட திட்டங்களை சொல்பவராகதான் உள்ளே வருவார். இந்த குழுவில் உள்ள மூன்று பேரும் நாவல்களைப் படித்து , கடுமையாக விவாதித்து ,இலக்கிய சண்டையாக போடுவார்கள். என் கருத்துபடி மிகச் சிறந்த படைப்புகள் தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவைகள் விருதும் பெற்றுள்ளன. தனக்கு விருது கிடைக்கவில்லை என்றால் குறை சொல்கிற வழக்கம் எல்லோருக்கும் உண்டு. இது அவரவர் பார்வையில் ஏற்படுகிற கோணம். இது இயல்பானது.

நீங்கள் வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி நாவல் எழுதுவது எந்ததளவுக்கு சாத்தியப்படுகிறது?

கட்டிடத்திற்கு தேவையான கல் , மண் , சிமெண்டு போன்றவைகளைச் சேகரித்தல் போலத்தான் வரலாற்று தரவுகளை சேகரிப்பது. என்னைப் பொறுத்தவரை வரலாறு என்பது தரவுகள் மட்டும்தான். இவைகளை வைத்துக் கொண்டு வரலாறு என்பது எப்படி ஒரு சொல் மாளிகையை கட்டுகிறது ? என்பது தான் பிரச்சனை. ஒரு கலைஞன் சரியான முறையில் வரலாற்று தரவுகளைக் கையாண்டானால் அந்த நாவல் வெற்றி பெறும் . சரியாக கையாளாமல் போனதால் பல நாவல்கள் தோல்வியைத்தான் அடைந்திருக்கிறது..

தற்போதைய இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எப்படி இருக்கிறது?

இளம் படைப்பாளிகளது எழுத்துக்கள் தன்னை முன்னிறுத்தாமல் பல பிம்பங்களை உடைத்து தள்ளியதால் இளம் படைப்பாளிகளின் எழுத்துகள் இலக்கியவாதிகளால் இப்போது கவனிக்கப்படுகிறது. இன்றைய தலைமுறையில் எழுத்தாளர்களின் எழுத்து அடையாளங்களைச் சார்ந்து கூர்ப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.சுய அடையாளங்கள், சாதிய அடையாளங்கள்,இன அடையாளங்கள் ,பெண் அடையாளங்கள் போன்ற அடையாளங்களைச் சார்ந்து எழுதப்படுவதால் இந்த எழுத்துக்கள் ஆழமும், வீரியமும்,விசாலமும் கொண்டவைகளாக இருக்கிறது. .சில சமயங்களில் சமூக வாசிப்பு குறைந்தவர்களுக்கோ, தெரியாதவர்களுக்கோ இவை புரியாமல் போய் விடுகிறது. சில சமயம் இந்த இலக்கியம் சமூகத்தின் அடி ஆழங்களில் இருக்கிற முரண்களை வெளிக் கொண்டு வருகிறது என புரிந்துக் கொண்டவர்களுக்கு இவை மிகமிகச் சுவையானதாக இருக்கிறது. மலர்வதி,கலைவாணன் உள்ளிட்ட இளம் படைப்பாளிகள் தங்களுடையச் சுய அடையாள பிரச்சனையை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல்,நேர்மையாக,வெட்ட வெளிச்சமாக தந்திருப்பதனால் இது எல்லோரையும் கவர்கிறது.

இப்போது வரும் படைப்புகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

நவீனத்துவம்தான் சிறந்தது என நினைப்பவர்கள் யதார்த்த இலக்கியங்களை வாசிக்கவே மறுக்கிறார்கள் . யதார்த்த இலக்கியம்தான் பெரியது என நினைப்பவர்கள் நவீனத்துவ இலக்கியங்களையும்,பெண்ணிய இலக்கியங்களையும் கண்டுக் கொள்ளவே மறுக்கிறார்கள். இன்றைய சூழலில் கொள்கைக்கு வெளியேயும்,கொள்கையைத் தாண்டியும் சிறந்த படைப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கொள்கை ரீதியாக சிந்திக்கிறவர்களும், எழுதுகிறவர்களும் இதை உணர மறுக்கிறார்கள்.இது நான் பார்த்த அளவில் பெரிய ஒரு நஷ்டம். இந்த கடிவாளப் போக்கு இலக்கியத்திற்கு உகந்தது அல்ல. நாம் எந்த இலக்கியக் கோட்பாட்டுக்குள் இருந்து எழுதினாலும் ,எல்லாவற்றையும் தேடுவது தான் சிறப்பாக இருக்கும். அதனுள்ளே என்னென்ன விஷயங்களை எடுத்துக் கொள்கிறோமோ அது நம்மை வளர்க்கும்.அது தான் முக்கியம் என நான் நினைக்கிறேன்.

உங்கள் குடும்பம் எழுத்தாளர்களாக தலைமுறை கடந்து நகர்ந்துக் கொண்டே இருக்கிறதே?

எங்கள் குடும்பத்தில் நான் தான் முதலில் எழுத வந்தேன். என்னைப் பார்த்து, நான் கொடுத்த புத்தகங்களைப் படித்து, எங்க அம்மா அழகிய நாயகி தனது கவலை நாவலை எழுதத் தொடங்கினாங்க . இப்போது என் மகள்கள் அழகுநிலாவும், அனிதாவும் எழுதத் தொடங்கி விட்டார்கள் . இப்போது என் பேரக் குழந்தைகளும் எழுதத் தொடங்கி விட்டார்கள். இப்போது அவர்கள் படிக்கிறதுனால அமைதியாக இருக்கிறார்கள் .என் மூத்த பேத்தியின் கதைகள் வெளிவரத் தொடங்கியாச்சி! அவளின் புத்தகம் ஓன்று வெளியிடத் தயார் நிலையில் இருக்கிறது. இப்போது எங்கள் குடும்பத்தில் நாலாவது தலைமுறையும் வந்தாச்சி.

நீங்கள் இலக்கியத்துக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

படைப்பு மனம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது, அது அவனுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதுவழியாக வெளிவருகிறது. என்னை சின்ன வயசிலேயே இந்த சமூகச் சூழல் அதிர வைத்தது. இந்த அதிர்வை ஆரம்பத்தில் டைரியில் எழுதினேன். அதன்பிறகு அந்த நாட்குறிப்பை வடிவப்படுத்தினேன்.அதுவே கதையாக மாறினது. அப்போது தான் நாம ஏன் கதை எழுதக் கூடாது?கவிதை எழுதக் கூடாது ? என எழுத முயற்சி செய்தேன். நான் நாடகம் எழுதிருக்கேன்.நாவல்களையே காவியமா எழுதிருக்கேன்.ரொம்ப முக்கியமான அடிப்படையான விஷயமாக ' மனித நேயம் ' என்மனதில் ததும்பிக் கொண்டிருந்த காரணத்தினால் ,மனித நேயத்தின் வழியாக இலக்கியங்களைப் படிக்கிற போது சமத்துவம் என்கிற சிந்தனை வலுவாக இருப்பதை எல்லா காலங்களிலும் நான் பார்த்திருக்கிறேன். நான் போராட்டத்தின் வழியாகவோ , தத்துவ பார்வையின் வழியாகவோ இலக்கியத்திற்கு வரவில்லை.

தமிழில் ஏன் இன்னும் நீண்ட காலமாக ஞான பீட விருது கொடுக்கப்பட வில்லை?

தமிழகம் இந்திய துணைக்கண்டத்தோடு முதன்மை நீரோட்டத்தில் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. எனக்கு ஞான பீட விருது கிடைக்க வேண்டும் என்று சுமார் 60 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் எழுத்தாளர்கள் பரிந்துரை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் ஞான பீட விருது கொடுக்கிற அமைப்பு சில பார்வைகள் கொண்டது. அந்த பார்வையும், படைப்பாளியின் பார்வையும் ஒன்றாக இருக்க வேண்டும். இது தவிர நமது தமிழக ஆட்சியாளர்கள் இலக்கிய ரசனை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்போது இவர்களும் அழுத்தம் கொடுக்க முடியும்.

சாதியப் போக்கு இலக்கியத்தில் கடுமையாக இருக்கிறதே?

எல்லாத்தையும் சமமாகப் பார்க்கும் எண்ணம் இந்தியாவில் கிடையாது. இங்குப் பொருளாதாரப் பார்வை, சாதியப் பார்வை என இரண்டு பார்வைகள் இருக்கிறது. இது இலக்கியத்துக்கும் பொருந்தும். எழுத்தாளர்களிடம் பிரிவினை இருக்கக் கூடாது. ஆனால் இலக்கியத்தில் மலர்ச்சி அடையாத பல சமூகங்கள் இருக்கிறது. அவர்களை மலர்ச்சி அடைய வைக்க வேண்டும். அந்த கடமை நமக்கு இருக்கிறது. இது குற்றமாக தெரிய வில்லை. ஒரு சமூகத்தில் இலக்கியம் பூத்து விட்டது என்றால் அந்த சமூகம் பூத்து விட்டது என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சாதியில் இருந்து எழுத்தாளர்கள் வந்தால் அவர்களைக் கொண்டாட வேண்டும். விருதுகள் கொடுத்து பாராட்ட வேண்டும்.

0 Comments

Write A Comment